[X] Close

ஸ்டெர்லைட் ஆலையில் என்னதான் நடக்கிறது?


sterlite-factory-issue

  • kamadenu
  • Posted: 22 May, 2018 15:15 pm
  • அ+ அ-

தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து மக்கள் போராட்டம் நடத்தும் அளவுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் அப்படி என்னதான் நடக்கிறது?

ஸ்டெர்லைட் கதை இதுதான்..

லண்டனில் செயல்பட்டுவரும் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத் தலைவர் அனில் அகர்வாலுக்குச் சொந்தமானதே ஸ்டெர்லைட் நிறுவனம். அந்நிறுவனத்தின் தாமிர ஆலைக்கு குஜராத், கோவா, மகாராஷ்டிரா என்று பல மாநிலங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டு, கடைசியாகத்தான் தூத்துக்குடிக்கு வந்தது. 1994-ல் அதிமுக ஆட்சியில் அடித்தளம் அமைக்கப்பட்டது. 1996-ல் திமுக ஆட்சியில் செயல்படத் தொடங்கியது.

வேதாந்தா ரிசோர்சஸ்க்கு உலகின் பல நாடுகளிலும் தாமிரத் தாதுவை வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. இந்தச் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கும் தாமிரத் தாது, உருக்கப்பட்டு தாமிர கேத்தோடு கம்பிகளாக மாற்றப்படுகின்றன.

1996-ல் முதன்முதலாக தூத்துக்குடி துறைமுகம் வழியே, ஆலைத் தேவைக்கு தாதுப்பொருட்கள் வந்தன. அப்போதே, ஆலைக் கழிவுகளால் மீன்வளம் பாதிக்கப்படும் எனப் படகுகளின் மூலம் கடல்வழியே துறைமுக முற்றுகைப் போராட்டம் நடத்தினர் மீனவர்கள்.

தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்ட மன்னார் வளைகுடாவின் அருகிலுள்ள பகுதிகளில் தொழிற்சாலைகளை நிறுவக் கூடாது. ஆனால், அந்த விதிமுறையை ஸ்டெர்லைட் மீறியதாகவும் குற்றச்சாட்டு உண்டு. ஆலையிலிருந்து கடல்வரைக்கும் அமைக்கப்பட்டிருந்த குழாய்கள் தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது.

1997 ஜூலை 5-ம் தேதி ஆலையிலிருந்து நச்சுப்புகை வெளியேறி, 150-க்கும் அதிகமானோர் மயங்கினர். சில கர்ப்பிணிகளுக்குக் கருச்சிதைவும் நிகழ்ந்ததாகச் சொல்கின்றனர். அப்போது அதிகாரிகள் ஆய்வுசெய்து ஆலையை மூடினார்கள். 38 நாட்களில் மீண்டும் ஆலை திறக்கப்பட்டது. அதற்கு சில வாரங்களுக்குப் பின்பு செம்புக் கலவை உலை வெடித்து இரண்டு தொழிலாளர்கள் பலியானார்கள். மீண்டும் சம்பிரதாய மூடல், அதன்பின் திறப்பு. 1999-ல் நச்சுப்புகை வெளியேறி, அருகிலிருந்த அகில இந்திய வானொலி நிலைய ஊழியர்கள் மயங்கிவிழுந்தனர்.

இப்படியாக நச்சைக் கக்கிவந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். ஆரம்பத்திலிருந்தே மதிமுகவும் இடதுசாரிகளும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 2013-க்குப் பின்பு அது வெகுமக்கள் போராட்டமாக மாறியது. இன்று மக்களின் உயிர்களைக் காவு வாங்கியுள்ளது.

ஸ்டெர்லைட் சந்தித்த வழக்குகள்:

1996 நவம்பர் 7-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆலைக்குத் தடைவிதிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார் மனுதாரரும், வழக்கறிஞருமான பிரகாஷ். இவ்வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரி வைகோ மனுபோட, அவரையும் சேர்த்துக்கொண்டது உயர் நீதிமன்றம். வழக்கில், தானே ஆஜராகி வாதாடினார் வைகோ. உயர் நீதிமன்றமோ, தேசிய சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையம் என்னும் 'நீரி'யிடம் ஆலையை ஆய்வுசெய்து அறிக்கை கேட்டது.

ஆலைக்குள் பாதுகாப்பற்ற முறையில் கழிவுகளைக் குவிந்து வைத்துள்ளனர், ஆலை உள்ள சுற்றுவட்டாரக் கிராமங்களில் நிலத்தடி நீரில் தாதுப் பொருட்கள் அதிகளவில் உள்ளன என்று நீரி அறிக்கை கொடுக்க, ஆலையை மூட உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். 

ஆனால், அறிக்கையில் உள்ள குறைகளைக் களைந்துவிட்டதாக மனுசெய்து, சிறிய இடைவெளிக்குப் பின்பு மீண்டும் இயங்கத் தொடங்கியது ஸ்டெர்லைட். நீரியை மீளாய்வு செய்யக் கேட்டது உயர் நீதிமன்றம்.

மீளாய்வு அறிக்கை ஸ்டெர்லைட்டுக்குச் சாதகமாக இருந்தது. இந்நிலையில், 1996-ல் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு 2010-ல் வந்தது. அதில் நீதிபதி எலிப்பி தர்மாராவ், ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்த ஸ்டெர்லைட், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெற்றது. உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் தீர்ப்புநாள் நெருங்கிவந்த நிலையில், 2013-ல் ஆலையிலிருந்து கந்தக-டை-ஆக்ஸைடு கசிந்தது. பலரும் மயங்கினர். தமிழக அரசே ஆலையை மூட உத்தரவிட்டது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே ஆலை தொடர்ந்து இயங்க உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுசெய்தார் வைகோ. ஆனால், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், சீராய்வு மனு என அத்தனையிலும் ஸ்டெர்லைட்டே வெற்றிபெற்றது.

இப்படியாக ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து வெற்றி பெற்று வரும் சூழலில் மக்கள் பொறுமையை இழந்துவிட்டனர் என்பதற்கு சாட்சிதான் இன்றைய கலவரம்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close