[X] Close

கேலி செய்தால் மூக்கை உடை:  மாணவிகளுக்கு கிரண்பேடி அறிவுரை 


kiran-bedi-advice

பெண்கள் தற்காப்பு பயிற்சி பட்டறையில் உரையாற்றும் ஆளுநர் கிரண்பேடி

  • kamadenu
  • Posted: 22 May, 2018 12:43 pm
  • அ+ அ-

தயக்கமின்றி பொது இடங்களுக்கு மாணவிகள் வந்து செல்லும் போது கேலி செய்வோரை எட்டி உதைத்து மூக்கை உடையுங்கள்! தன்னம்பிக்கையுள்ள பெண்களாக உருவாகுங்கள் என்று மாணவிகளுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுரை வழங்கியிருக்கிறார். 

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, புதுச்சேரி மாநில மகளிர் வள மையம், இளைஞர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் சார்பில் ஒருங்கிணைந்த பெண்கள் தற்காப்பு பயிற்சி பட்டறை கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் நேற்று துவங்கியது. அமைச்சர் கந்தசாமி தலைமை வகித்தார்.

இப்பயிற்சி பட்டறையை ஆளுநர் கிரண்பேடி தொடக்கி வைத்து பேசியதாவது:

திருமணத்துக்கு வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். யாராவது வரதட்சணை கேட்டால் கொடுக்க முடியாது என்று கூறுங்கள். பிறகு அவர்களாவே வரதட்சனையின்றி திருமணம் செய்து கொள்ள இறங்கி வருவார்கள். திருமணத்தின்போது உங்களது வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட தொகையை பெற்றோர் டெபாசிட் செலுத்தினால் அதனை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். அதனை யாராவது கேட்டால் எடுத்து கொடுக்கக் கூடாது.

உங்களுக்கு பிடிக்காத நபர்களை கட்டாய திருமண செய்ய முயன்றால், இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று கூற வேண்டும். அதை விட்டுவிட்டு பிறகு வாழ்க்கையில் புலம்பக் கூடாது. 

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், உங்களால் சமாளிக்க முடியவில்லை என்றால் உடனே 1031க்கு புகார் அளியுங்கள். 

உங்களுக்கு நீங்களே சரியான தலைமை

எப்போதும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அது உங்களை சுறுசுறுப்பாகவும், உடல் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும்.

உங்களுக்கு நீங்கள் சரியான தலைமையாக இருக்க வேண்டும். நீங்கள் சரியாக செயல்பட்டால் உங்களை பார்த்து மற்றவர்கள் கற்றுக் கொள்வார்கள். 

எதை பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனை துணிச்சலுடன் பேசுங்கள். அச்சத்துடன் இருக்காதீர்கள். இப்பயிற்சி முடித்து வெளியே போனவுடன் மனதளவில் தன்னம்பிக்கை உள்ள பெண்களாக இருக்க வேண்டும். 

பெண்களுக்கு புத்தக அறிவு மட்டுமே தன்னம்பிக்கையை தராது. ‘என்னால் தலைமையேற்க முடியும்’ என்று கூறி முன்வர வேண்டும். அப்போதுதான் தன்னம்பிக்கை ஏற்படும். முதலில் பெண்கள் தயக்கமின்றி தனியாக பயணம் செய்ய வேண்டும். பெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது யாராவது பின் தொடர்ந்தாலோ, கேலி, கிண்டல் செய்தாலோ எட்டி உதையுங்கள். மூக்கை உடையுங்கள். பிறகு அவர்கள் உங்கள் பக்கம் வரவே மாட்டார்கள்.

பெண்கள் என்னை அடிக்கிறார்கள் என்று ஆண்கள் புகார் அளிக்க வேண்டும். அதுபோல் தைரியமாக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு பெண்கள் தலைமையில் ஆண்கள் என்ற நிலை உருவாக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கிரண்பேடியின் செயல் விளக்கம் 

பயிற்சிக்கு வந்த மாணவிகளிடம், உங்களில் எத்தனை பேரை இளைஞர்கள் பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பெரும்பாலான மாணவிகள் கையை உயர்த்தி காட்டினர். 

பிறகு, அந்த இளைஞர்கள் உங்களிடம் என்ன கேட்டார்கள் என்று கேட்டார். அதற்கு, மொபைல் எண் கேட்டதாக தெரிவித்தனர். அதற்கு, ‘1031’ என்ற எண்ணை கொடுங்கள் என்றார். 

“உங்களை பின் தொடரும் இளைஞர்களை புகைப்படம் எடுத்தால், உங்கள் பக்கம் வர அவர்கள் பயப்படுவார்கள். அதன் பிறகும் வந்தால் 1031க்கு புகார் அளியுங்கள். 

மற்றதை காவல்துறை பார்த்து கொள்ளும். நீங்கள் புகார் அளித்தால் பெயர் வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயம் வேண்டாம். 

உங்களது பெயர் பாதுகாப்பாக இருக்கும். இளைஞர்கள் தொல்லை தருகிறார்கள் என்று நீங்கள் வழியை மாற்றினால், அவர்கள் வேறொரு பெண்ணுக்கு தொல்லை கொடுப்பார்கள். நீங்கள் மன தைரியத்துடன் செயல்பட்டால் இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்யும் பழக்கத்தை விட்டு விடுவார்கள்’’ என்று குறிப்பிட்டார். 

அதன் பின்னர், கேலி செய்யும் இளைஞர்களை எப்படி தாக்குவது என்று ஆளுநர் கிரண்பேடி செயல்விளக்கம் அளித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close