[X] Close
 

முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்ட சுரங்கப்பாதையில் 45 லட்சம் கியூபிக் மீட்டர் மண் தோண்டி எடுப்பு: திருநீர்மலை, தீவுத்திடல் உள்ளிட்ட 10 இடங்களில் பள்ளங்கள் சீரமைப்பு


metro-rail-unit

  • kamadenu
  • Posted: 20 May, 2018 12:29 pm
  • அ+ அ-

சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்க 45 லட்சம் கியூபிக் மீட்டர் மண் தோண்டப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் திருநீர்மலை, தீவுத்திடல் உள்ளிட்ட 10 இடங்களுக்கு இந்த மண் கொண்டு செல்லப்பட்டு பெரிய, பெரிய பள்ளங்களை நிரப்பியுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் நடக்கும் மெட்ரோ ரயில் பணிகளில் 25 கிமீ சுரங்கப்பாதை வழியாக ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்ட்ரல், எழும்பூர், கீழ்ப்பாக்கம், ஷெனாய்நகர், அண்ணாநகர், சைதாப்பேட்டை, டிஎம்எஸ், ஆயிரம்விளக்கு உட்பட மொத்தம் 19 ரயில் நிலையங்கள் சுரங்கப்பாதையில் அமைக்கப்படுகின்றன. இதில், தற்போது திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கிய சுரங்கம் தோண்டும் பணி, 2017-ம் ஆண்டில் முடிவடைந்தது. ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து, கொண்டு வரப்பட்ட 12 ராட்சத போரிங் இயந்திரங்கள் மூலம் சுரங்கப்பாதை தோண்டப்பட்டது. சாலையின் மேல் பகுதியில் இருந்து சுமார் 17 மீட்டர் ஆழத்தில் 6 மீட்டர் விட்டத்தில் சுரங்கம் தோண்டப்பட்டு, 20 மீட்டர் ஆழத்தில் ரயில்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாளும் 5 முதல் 6 மீட்டர் தூரம் சுரங்கம் தோண்டப்பட்டது.

2 தளங்கள் கொண்ட சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் மட்டும் 380 மீட்டர் நீளம், 33 மீட்டர் அகலம் கொண்டது. இந்தப் பணி நடக்கும் இடத்தில் உள்ளே சென்று பார்க்கும்போது, பிரம்மாண்டமாக இருக்கும் பெரிய குகை போல் காட்சி அளிக்கிறது. இப்படி, மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக தோண்டப்பட்ட மண் அளவுதான் எவ்வளவு?, தோண்டப்பட்ட மண் ஒரே இடத்தில் மட்டும் குவித்திருந்தால், சிறிய மலைபோல் இருந்திருக்கும்.

மண் பரிசோதனை

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: சென்னையில் மெட்ரோ ரயில் பாதைக்காக சுரங்கம் தோண்டும்போது பல்வேறு வகையான மண், லேசான பாறைகள், வலுவான கற்கள் காணப்பட்டன. ஒவ்வொரு 50 மீ இடைவெளியில் மண் பரிசோதனை செய்துதான், சுரங்கம் தோண்டும் பணிகளை மேற்கொண்டோம்.

பாறைகள், கருங்கற்கள் அதிகமாக இருந்த சில இடங்களில் சுரங்கம் தோண்டும் பணி சவாலாக இருந்தது. குறிப்பாக, வண்ணாரப்பேட்டை - சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் சுரங்கம் தோண்டும் பணி சிக்கலாக இருந்தது. இந்த தடத்தில் ஆயிரக்கணக்கான பழமையான கட்டிடங்கள் இருந்தன. மேலும், கட்டிடங்கள் அதிக அளவில் நெருக்கமாக இருந்ததால், மிகவும் கவனமாகப் பணிகளை மேற்கொண்டோம்.

முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணியில், 2 வழித்தடங்களில் சுமார் 25 கிமீ தூரம் சுரங்கப்பாதையில், மொத்தம் 45 லட்சம் கியூபிக் மீட்டர் மண் தோண்டியுள்ளோம். 5 கியூபிக் மீட்டர் மண் ஒரு லாரியில் அடங்கும். அந்த வகையில் மொத்தம் 9 லட்சம் லாரிகள் டிரிப் (நடை) கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சாலை சீரமைப்பு, விரிவாக்கம்

சென்னையில் இருந்து சுமார் 40 கிமீ தூரம் வெளியே கொண்டு சென்று மண் கொட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் புறநகர் பகுதிக்குக் கொண்டு சென்று, தமிழக அரசின் ஒப்புதலுடன் பள்ளமாக இருக்கும் இடங்களைத் தேர்வு செய்து நிரப்பியுள்ளோம்.

தீவுத்திடல், திருநீர்மலை, கத்திப்பாரா, திருவள்ளூர் உள்ளிட்ட 10 இடங்கள் இதில் அடங்கும். சில இடங்களில் சாலை சீரமைப்பு, சாலை விரிவாக்கப் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த மண் வர்த்தக ரீதியாக விற்பனை செய்யப்படவில்லை.

ரூ.85,047 கோடி திட்ட அறிக்கை

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையின் 2-வது கட்டமாக மாதவரம் முதல் சிறுசேரி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் முதல் கலங்கரை விளக்கம், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் என 3 வழித்தடங்களில் 107.55 கிமீ தூரத்துக்கு ரூ.85,047 கோடிக்கு திட்ட அறிக்கையைத் தயாரித்து மத்திய அரசிடம் தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.

இதில், சுமார் 65 சதவீத வழித்தடம் சுரங்கப்பாதையில் இயக்கப்படவுள்ளது. இதனால், முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தைவிட, இந்தத் திட்டத்தில் 2 மடங்கு மண் சுரங்கப்பாதை அமைக்க தோண்டப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தோண்டப்படும் இந்த மண் வணிகப் பயன்பாட்டுக்கு விற்பது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் ஆலோசனை செய்து வருகிறது. இருப்பினும், இதுதொடர்பாக தமிழக அரசு முடிவு செய்து அறிவிக்கும்.

இவ்வாறு மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

- கி.ஜெயப்பிரகாஷ்

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close