[X] Close

 அடர்ந்த காட்டின் நடுவே பரிசல் பயணம் வனத்துறை, பழங்குடியின மக்களின் ‘பரளிக்காடு சுற்றுலா


paralikkadu-tourism

பரளிக்காட்டில் பெரிய ஏரிபோல தேங்கியிருக்கும் பவானி ஆற்றில் ஆனந்தமாய் பரிசல் சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்.

  • kamadenu
  • Posted: 19 May, 2018 16:09 pm
  • அ+ அ-

மாசுபடாத இயற்கை வளம், காணும் இடமெல்லாம் பசுமை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை சுத்தமான தண்ணீர் என்பதெல்லாம் தற்போது அரிதாய் கிடைக்கும் விஷயங்களாக மாறிவிட்டன.

ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இவையெல்லாம் கிடைக்கும் இடமாய்த் திகழும் பரளிக்காட்டில், வனத்துறை, பழங்குடியினர் இணைந்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக் கின்றனர். மனதை மயக்கும் இயற்கை எழில், தூய்மையான காற்று, அடர்ந்த மரங்கள், மலை முகடுகளில் வளைந்து நெளிந்து ஓடும் ஆறு, அவற்றில் தாகம் தீர்க்கும் வன விலங்குகள், மண் மனம் மாறாத பழங்குடியின மக்கள் என முற்றிலும் இயற்கை அன்னையின் அரவணைப்பால் நிரம்பியுள்ளது பரளிக்காடு.

மறக்கமுடியாத அனுபவத்துடன், உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்கு பரளிக்காடு சரியான தேர்வு என்கின்றனர் சுற்றுலா பயணிகள். 

சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டோம் என்ற வாக்குறுதியுடன், மது, புகை கூடாது, பிளாஸ்டிக் பொருட்கள் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், வனத் துறையிடம் முன்கூட்டியே பதிவு செய்து கொண்டால், பரளிக்காடு சுற்றுலா செல்ல தடையில்லை.

தமிழக-கேரள எல்லையோரம், பில்லூர் அணைப் பகுதியில் அமைந்துள்ள பரளிக்காட்டுக்கு, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் 30 கி.மீ. தொலைவில் உள்ள காரமடையில் இருந்து அடர்ந்த மலைக் காடுகள் வழியே மீண்டும் 34 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். பரளிக்காடு சென்றவுடன் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் உள்ளூர் மலைவாழ் மக்கள் சூடான சுக்குகாப்பி கொடுத்து வரவேற்கின்றனர். சிறிது ஓய்வுக்குப் பின் பரிசல் பயணம் தொடங்குகிறது.

பில்லூர் அணையின் பின்புறம், பெரிய ஏரிபோல தேங்கி நிற்கும் பவானி ஆற்று நீரில் பயணிக்க 20 பரிசல்களும், 22 ஓட்டுநர்களும் தயார் நிலையில் உள்ளனர். வழக்கமான மூங்கில் பரிசலாக அல்லாமல், பாதுகாப்புக்காக ஃபைபரால் செய்யப்பட்ட பரிசலில் செல்லும் அனைவருக்கும் கட்டாயமாக லைஃப் ஜாக்கெட் அணிவிக்கப்படுகிறது.


பவானி ஆற்றங்கரையோரம் தாகம் தீர்த்து, உணவு தேடி வந்த மான்கள்.

வனத் துறையால் நியமிக்கப்பட்ட உள்ளூர் பழங்குடியின இளைஞர்கள் பரிசல்களை இயக்குவதுடன், அப்பகுதியின் காடு, வன விலங்குகள், தங்களது வாழ்க்கைமுறை குறித்து விளக்குகின்றனர். சுற்றுலா பயணிகள் செல்லும் பரிசல்களின் பாதுகாப்புக்காக இரு பைலட் பரிசல்களும் உடன் செல்கின்றன. பயணத்தின்போது கரையோரத்தில் காட்டு யானை, மான் மற்றும் காட்டெருமைக் கூட்டங்களையும் ரசிக்கும் வாய்ப்புகிடைக்கும்.

சுமார் 2 மணி நேர பரிசல் பயணத்துக்குப் பின்னர், பசுமை நிறைந்த காட்டுக்குள் இளைப்பாறினால், பழங்குடி மக்களின் கலாச்சார முறைப்படி தயாரிக்கப்பட்ட சுவையான உணவு வழங்கப்படுகிறது. ராகி களி, கீரை, நாட்டுக்கோழிக் கறி, தயிர்சாதம், சப்பாத்தி, பழங்கள் ஆகியவை பரிமாறப்படுகின்றன.

பின்னர் ஆற்றை ஒட்டிய பகுதியில், வனத்தை அறிந்த பழங்குடியினர், வனத் துறையினர் பாதுகாப்புடன், காட்டுக்குள் ட்ரக்கிங், அத்திக்கடவு பகுதியில் ஆற்றில் குளியல் ஆகியவையும் மனதை மயக்கும். இயற்கையோடு இணைந்து வாழ பெரியவர்களுக்கு ரூ.500, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.400 (உணவு உட்பட) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாரத்தில் சனி, ஞயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அனுமதி என்பதால், இந்த சூழல் சுற்றுலாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே வனத்துறையிடம் முன்பதிவு செய்வது அவசியம்.

கார் மற்றும் வேன்களில் மட்டுமே இப்பகுதியில் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது. சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் பழங்குடியின மக்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டுப் பணிகளுக்கு வனத்துறையால் செலவிடப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது கோடை விடுமுறை என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் பரளிக்காட்டுக்கு வருகின்றனர். நகர வாழ்வின் பரபரப்பில் இருந்து விலகி, சுற்றிலும் மலைகள் சூழ, சுத்தமான காற்றை சுவாசித்து, இதமாய் மலைக் காட்டு நீரில் குளித்து, வன விலங்குகளை ரசித்து, பழங்குடியினரின் சத்தான உணவுகளை சுவைத்து, அமைதியாய் இயற்கையோடு ஒன்றியிருக்கும் சுகம் பரளிக்காட்டில் கிடைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close