[X] Close

 டிராக்டர் ஓட்டி உழவு செய்யும் இளம்பெண்: தந்தைக்கு தோள் கொடுக்கிறார்


women-farmer-tractor

விளாத்திகுளம் அருகே கத்தாளம்பட்டியில் தங்களது குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தை டிராக்டர் மூலம் நேர்த்தியாக உழவு செய்யும் செல்வகுமாரி

  • kamadenu
  • Posted: 19 May, 2018 15:58 pm
  • அ+ அ-

விளாத்திகுளம் அருகே கத்தாளம்பட்டியை சேர்ந்த இளம்பெண் செல்வகுமாரி தங்களது குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தை டிராக்டர் மூலம் நேர்த்தியாக உழுகிறார். விவசாயப்பணிகளில் தனது தந்தைக்கு தோள் கொடுக்கும் அவர் கிராமப் பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் பீடு நடை போட்டாலும், விவசாயத்தை பொறுத்தளவில் நாற்று நடுதல், களை பறித்தல், அறுவடை செய்தல் உள்ளிட்ட உடல் உழைப்பு சார்ந்த பணிகளையே அவர்கள் அதிகம் மேற்கொள்வார். 

டிராக்டர் மூலம் உழுவது உள்ளிட்ட இயந்திரம் சார்ந்த பணிகளில் பெரும்பாலும் ஆண்களே ஈடுபடுவர்.

ஆனால், விவசாயம் செய்யும் தந்தைக்கு உதவியாக டிராக்டர் மூலம் நேர்த்தியாக உழவு செய்து, ஆணுக்கு பெண் சளைத்தவரில்லை என கட்டியம் கூறுகிறார், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே கத்தாளம்பட்டியை சேர்ந்த செல்வகுமாரி. 

7 மகள்கள்

இவரது தந்தை முருகானந்தம், மின்வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் சோலைராசாத்தி. இத்தம்பதிக்கு 7 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 

மூத்த மகள் நிர்மலாதேவி எம்.பில் முடித்து விட்டு கோவில்பட்டியில் கணவருடன் வசிக்கிறார். 2-வது மகள் செல்வகுமாரி (32). இவரது கணவர் சித்திரை செல்வன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். 

இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்களை தவிர சுகுமாரி, கமலகுரு, விக்னேஸ்வரி, பிரித்தா, அனுஷியா ஆகிய மகள்களும், சிவசக்திபாலா என்ற மகனும் உள்ளனர். விக்னேஸ்வரி தூத்துக்குடி ஆயுதப்படையில் போலீஸாக பணிபுரிகிறார்.

அண்ணனிடம் கற்றனர்

முருகானந்தத்துக்கு சொந்தமாக 35 ஏக்கர் நிலம் உள்ளது. கண்மாய் மூலம் பாசன வசதி பெற்று வந்தது. கண்மாயில் தற்போது தண்ணீர் இல்லாததால் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்கிறார்.

 ‘‘இதற்கு முன்பு சொந்தமாக மாடுகள் வைத்து உழவு செய்து வந்தோம். நாளடைவில் அவற்றை பராமரிக்க முடியாததால் விற்று விட்டோம். இதன் பிறகு உழவுப் பணிக்காக டிராக்டரை வாடகைக்கு எடுப்பேன். ஆனால், குறித்த பருவத்துக்கு டிராக்டர் கிடைக்காது. 

இதனால் நான் சொந்தமாக டிராக்டர் வாங்கினேன். எனது மகள்களுக்கு டிராக்டர் ஓட்ட கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. 

சென்னையில் மெக்கானிக்காக உள்ள எனது அண்ணன் மகன் மணிகண்டன் ஊருக்கு வரும்போது, அவரிடம் டிராக்டரை எப்படி இயக்க வேண்டும் என அவர்கள் கேட்டு தெரிந்து கொண்டனர். 

மற்ற மகள்களை விட செல்வகுமாரி மிகவும் லாவகமாக டிராக்டரை ஓட்ட பழகிக் கொண்டார்’’ என சிலாகித்தார் முருகானந்தம்.

தோள் கொடுக்கிறோம்

செல்வகுமாரி கூறும் போது, ‘‘எனது தந்தை இல்லாத நேரத்தில் டிராக்டரை இயக்க முயற்சிப்பேன். தொடர்ந்து,

 ஊருக்கு வந்த எனது பெரியப்பா மகனிடம் லாவகமாக டிராக்டரை இயக்குவது குறித்து கேட்டறிந்தேன். அவர் சொன்னதை மனதில் வைத்து இயக்கினேன். டிராக்டரை பொருத்தவரை முன்னோக்கி இயக்குவது எளிதாக இருக்கும். 

பின்னோக்கி இயக்குவது சற்று கடினம். மேலும், நிலத்தை சரியாக உழ வேண்டும். இதற்காக நான் சிரத்தையுடன் பயிற்சி எடுத்தேன். சில நாட்களில் டிராக்டர் மூலம் நேர்த்தியாக உழவு செய்ய கற்றுக் கொண்டேன். எனது தங்கைகள், தம்பிக்கும் கற்றுக் கொடுத்தேன். எங்களை பொருத்தவரை ஆணுக்கு சரிநிகர் சமமாக விவசாயப் பணிகளில் தந்தைக்கு தோள் கொடுக்கிறோம்’’ என பெருமிதத்துடன் கூறினார். 

‘‘விவசாய வேலையை ஒற்றை ஆளாக நின்று செல்வகுமாரி பார்த்துக் கொள்வார். 

எந்த வேலையையும் சளைக்காமல் பார்ப்பார்’’ என மகளின் உழைப்புக்கு பெருமிதம் பொங்க சான்று பகர்கிறார், தாய் சோலைராசாத்தி.

- எஸ்.கோமதிவிநாயகம்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close