[X] Close

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய  யூக்கலிப்டஸ் மரங்களை வெட்டி அழித்த திருநங்கைகள்


eucalyptus-deforestation

புதுக்கோட்டை மாவட்டம் கெண்டையன்பட்டியில் யூக்கலிப்டஸ் மரங்களை வெட்டி அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள திருநங்கைகள்

  • kamadenu
  • Posted: 18 May, 2018 12:33 pm
  • அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கெண்டையன்பட்டியில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய யூக்கலிப்டஸ் மரங்களை திருநங்கைகள் நேற்று வெட்டி அழித்தனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 1 லட்சம் ஏக்கரில் யூக்கலிப்டஸ் மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் நிலத்தடி நீரையும், காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சுவதால், மழைப்பொழிவு படிப்படியாக குறைந்து வருகிறது என குற்றஞ்சாட்டப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து, அரசு வனத்தோட்டக் கழகம், வனத்துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறைக்கு சொந்தமான பகுதியில் உள்ள யூக்கலிப்டஸ் மரங்களை அகற்றுமாறு பல்வேறு சமூக நல அமைப்புகள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றன. 

யூக்கலிப்டஸ் மரங்களை அகற்றக் கோரி கடந்த வாரம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் குடை பிடித்தவாறு சென்று புதுக்கோட்டை ஆட்சியரிடம் மனு அளித்தனர். எனினும், யூக்கலிப்டஸ் மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து, முன்மாதிரி முயற்சியாக மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் இயற்கை நல ஆர்வலர்கள் இணைந்து தனியார் நிலத்தில் உள்ள யூக்கலிப்டஸ் மரங்களை அகற்ற திட்டமிட்டனர். 

அதன்படி, கறம்பக்குடி அருகே கெண்டையன்பட்டியில் உள்ள வினோத்குமார் என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட யூக்கலிப்டஸ் மரங்கள் நேற்று வெட்டி அகற்றப்பட்டன. பின்னர், அவற்றை வேரோடு பிடுங்கி அகற்றிவிட்டு, அங்கு மாற்று மரங்களை நடுவதற்கும் ஆலோசனை கூறப்பட்டது. 

இதுகுறித்து திருநங்கைகள் கூறியது: 

யூக்கலிப்டஸ் காட்டுக்குள் புல், பூண்டுகூட வளர்வதில்லை. அங்கு எந்த காட்டு விலங்கினங்களோ, ஜந்துக்களோ இருக்காது. அந்த அளவுக்கு அனல் தன்மை வாய்ந்தவை இந்த மரங்கள். அதனால்தான் இந்த மரங்களை அகற்றிவிட்டு மாற்று மரங்களை நடுமாறு ‘பொறந்த ஊருக்கு புகழ தேடு’ என்ற சமூக அமைப்புடன் சேர்ந்து மரங்களை அகற்றுவதற்கான விழிப்புணர்வு பணியைத் தொடங்கியுள்ளோம். 

இதேபோன்று, விருப்பம் தெரிவிப்போரது காடுகளுக்கு சென்று யூக்கலிப்டஸ் மரங்களை வெட்டி அகற்ற உள்ளோம். அதன்பிறகு அந்த நிலங்களில் மாற்று மரக்கன்றுகளை நட உள்ளோம். நாங்கள் பிறந்த மண்ணை மலடாக்க விடமாட்டோம் என்றனர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close