[X] Close

மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் புத்துயிர் பெறுமா?


mannar-gulf-biosphere-reserve

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் உள்ள பவளப்பாறைகளை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணி

  • kamadenu
  • Posted: 18 May, 2018 12:29 pm
  • அ+ அ-

பவளப்பாறைகள் பாதுகாக்கும் பணியை மேற்கொண்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளையை வனத்துறையின் கீழ் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கு பதிலாக இந்த அறக்கட்டைளையை முன்புபோல் தனித்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ராமேசுவரம் தொடங்கி தூத்துக்குடி வரையிலான 140 கி.மீ. பரப்பளவில் பவளப்பாறைகள் உள்ளன. இவை கடலின் தட்பவெப்பத்தை பேணிக்காக்கவும் கடல் பகுதிகளை இயற்கைப் பேரிடர்களில் இருந்து பாதுகாக்கவும் அரணாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக கடத்தல், கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தல் போன்றவற்றால் இந்த பவளப்பாறைகள் அழிந்து கொண்டிருக்கின்றன.

இதை காப்பதற்காக மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தமிழக அரசு உருவாக்கியது. இந்த அறக்கட்டளையின் பணி மன்னார் வளைகுடா கடற்பகுதியில் உள்ள கடல்வாழ் அரிய உயிரினங்கள் மற்றும் தாவரங்களைப் பாதுகாத்தல் மற்றும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துதல், மீனவர்களின் சமூக மேம்பாட்டை உயர்த்துவது ஆகியவைதான். தற்போது இதில் 80 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த அமைப்பு முதலில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், உலகளாவிய சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பின் நிதி உதவியுடன் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இயங்கி வந்தது. இந்த நிதி உதவி 2012-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

இதையடுத்து அறக்கட்டளையை தனது கட்டுப்பாட்டில் தமிழக அரசு எடுத்துக்கொண்டது. இப்போது இந்த உயிர்க்கோளக் காப்பகத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் வனத்துறையின் கீழ் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பவளப்பாறைகளை பாதுகாக்கும் பணியில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராமேசுவரத்தில் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சி.ஆர். செந்தில்வேல் கூறியதாவது: மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளையை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட பின், மேலும் 4 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை நீட்டித்து அறிவித்தது. ஆண்டுக்கு ரூ.2.5 கோடி வீதம், நான்கு ஆண்டுகளுக்கு ரூ.10 கோடி அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ரூ.5.96 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2017-2018 நிதிநிலை அறிக்கையில் ரூ.74 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு, இத்திட்டம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென்று தற்போது, மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தை இதுவரை பராமரித்து வந்த அறக்கட்டளையின் காலம் முடிந்ததாகக் கூறி பணிகளை நிறுத்திவிட்டு, உயிர்க்கோள காப்பகத்தை முழுமையாக தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்புத் துறையின்கீழ் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே, வனத்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றை முறையாக செயல்படுத்துவதற்கே போதிய ஊழியர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, மீண்டும் தமிழக அரசு மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளையை தற்கால சூழலுக்கு ஏற்ப, விதிகளில் மாற்றம் செய்து, மத்திய அரசு மற்றும் ஐ.நா. நிதியுதவியுடன் செயல்படச் செய்ய வேண்டும். அப்போதுதான் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் உள்ள பவளப்பாறைகள் உள்ளிட்ட கடல் வளங்களை பாதுகாக்க முடியும் என்றார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close