[X] Close

பிளஸ் 2 தேர்வில் 1093 மதிப்பெண் பெற்று சாதனை: மருத்துவராக விரும்பும் குழந்தைத் தொழிலாளி 


plus-2-result-child-labors-education

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற முன்னாள் குழந்தைத் தொழிலாளர்கள் | படம்: ஜெ.மனோகரன்

  • kamadenu
  • Posted: 17 May, 2018 11:35 am
  • அ+ அ-

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து, மீட்கப்பட்ட மாணவர் பிளஸ் 2 தேர்வில் 1093 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். எதிர்காலத்தில் சிறந்த மருத்துவராகி, மக்களுக்கு சேவை புரிவதே நோக்கம் என்றார்.

பல்வேறு தொழில், வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, சிறப்புப் பள்ளிகள் மற்றும் வழக்கமான பள்ளிகளில் படிக்க வைக்கும் பணியில் தேசிய குழந்தைத் தொழிலாளர் மீட்பு மற்றும் மறுவாழ்வுத் திட்ட அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு பயின்றவர்தான் சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த எஸ்.தரணிதரன் (17). இவரது தந்தை சிவக்குமார். வாகன ஓட்டுநர். தாய் ருக்மணிதேவி. 2013-ல் 7-ம் வகுப்பு பயின்றபோது வறுமை மற்றும் குடும்பச் சூழலால் படிப்பை நிறுத்திவிட்டு, திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணிபுரியச் சென்றுள்ளார் தரணிதரன்.

பின்னர், கோவையில் உள்ள தேசிய குழந்தைத் தொழிலாளர் மீட்பு மற்றும் மறுவாழ்வுத் திட்ட அலுவலர்களால் மீட்கப்பட்டு, திருப்பூரில் செயல்படும் குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பின்னர், சேலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 வரை பயின்றார். பிளஸ் 2 தேர்வில் தமிழில் 185, ஆங்கிலத்தில் 184, கணிதத்தில் 191, வேதியியலில் 184, இயற்பியலில் 178, உயிரியலில் 171 என மொத்தம் 1093 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்வும் எழுதியுள்ளார்.

மாணவர் தரணிதரன் ‘தி இந்து’விடம் கூறும்போது, 'குடும்பச் சூழலால் படிப்பைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டேன். பின்னர் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்களால் மீட்கப்பட்டு, பள்ளியில் சேர்க்கப்பட்டேன். தற்போது படிப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளது. எதிர்காலத்தில் டாக்டராகி, ஏழை மக்களுக்கு சேவை செய்வதே எனது விருப்பம்' என்றார்.

பனியன் நிறுவன தொழிலாளிகள்

திருப்பூரைச் சேர்ந்த ஏ.டி.கஸ்தூரி 8-ம் வகுப்பு படிக்கும்போது, அவரது தாய் உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார். இதனால் படிப்பை நிறுத்திய கஸ்தூரி, திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் மீட்கப்பட்ட அவர், திருப்பூரில் உயர்நிலைக் கல்வியும், திண்டுக்கல் காந்தி கிராமம் கஸ்தூரிபாய் சேவிகா ஆசிரமப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியும் பயன்றார். பிளஸ் 2 தேர்வில் 820 மதிப்பெண் பெற்றுள்ள இவர், பி.காம். (சிஏ) படிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இவரது தந்தை தள்ளுவண்டிக் கடையில் பஜ்ஜி, பேண்டா விற்று, குடும்பத்தை நடத்தி வருகிறார்.

திருப்பூர் கேவிஆர் நகரைச் சேர்ந்த லாவண்யாவும் தந்தையை இழந்தவர். தாய் அமராவதி, அங்கன்வாடிப் பணியாளர். வறுமையால் படிப்பைத் தொடர முடியாத லாவண்யாவும் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி, அலுவலர்கள் மீட்கப்பட்டு, பள்ளியில் சேர்க்கப்பட்டார். கடலூர் மாவட்டம் இறையூரில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று, பிளஸ் 2 தேர்வில் 734 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். நர்சிங் பயின்று, சிறந்த செவிலியராக வேண்டுமென இவர் விருப்பம் தெரிவித்துள் ளார். கோவையில் செயல்படும் தேசிய குழந்தைத் தொழிலாளர் மீட்பு மற்றும் மறுவாழ்வுத் திட்ட அலுவலர் டி.வி.விஜயகுமார் கூறும்போது, 'மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில் நடப்பாண்டில் 8 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதியதில் 7 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கு உயர்கல்வி வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.

- ஆர்.கிருஷ்ணகுமார்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close