போதை விழிப்புணர்வில் கின்னஸ் சாதனை: சுங்க இலாகா உதவி ஆணையருக்கு விருது

கின்னஸ் சாதனை விருதுடன் வெங்கடேஷ் பாபு
போதை விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மத்திய சுங்க இலாகா நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
உலகம் முழுவதும் போதைக்கு அடிமையானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்க விழிப்புணர்வு பெறச்செய்வது முக்கியம்.
இதுவரை 147 கல்லூரிகளில் போதை விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் நடத்தி உள்ளேன். எனது பேச்சினை மாணவர்கள் ஆர்வமுடன் கேட்டு வருகின்றனர்.
போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியை உலக சாதனையாக மாற்றும் நிகழ்ச்சி சென்னையில் பிப். 2-ம் தேதி நடந்தது. அதில் ஒரு மணி நேரம் 37 நிமிடங்கள் பேசினேன். எனது பேச்சை 2009 மாணவ, மாணவியர் மிக உன்னிப்பாக கவனித்தனர். இதை 7 கேமராக்களில் பதிவு செய்து கின்னஸ் சாதனைக்காகப் பதிவு செய்ய அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் அதிக கூட்டங்களில் அதிகமானவர்கள் எனது சொற்பொழிவை கேட்டுள்ளனர் அதற்காக கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 672 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியே சாதனையாக இருந்தது. எனது நிகழ்ச்சியை ஆய்வு செய்த கின்னஸ் நிறுவனம் சாதனையாக ஏற்று விருது வழங்கியுள்ளது என்றார்.