[X] Close

இயற்கை எழில் கொஞ்சும் மன்னவனூர்: சுற்றுலா பயணிகளுக்காக போக்குவரத்துக்கழகம் மினி பஸ்களை இயக்குமா?


mannavanur-tourism

கொடைக்கானல் மேல்மலைப் பகுதி மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்தில் உள்ள ஏரியில் பரிசல் சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகள்

  • kamadenu
  • Posted: 16 May, 2018 12:32 pm
  • அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புதிய அனுபவமாக மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்திலுள்ள ஏரியில் பரிசல் சவாரி செய்து மகிழலாம். இயற்கை எழில் கொஞ்சும் பசுமை போர்த்திய இடமாக வனத்துறைக்கு சொந்தமான மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளது.

கொடைக்கானலுக்கு செல்லும் அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய இடம் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம். மேல்மலைப் பகுதியான மன்னவனூர், கொடைக்கானலில் இருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேல்மலை பகுதிக்கு பஸ் போக்குவரத்து இருந்தாலும், சுற்றுலா செல்பவர்கள் மன்னவனூர் செல்ல தனி வாகனங்கள் தான் உகந்ததாக இருப்பதால், குறைந்த பட்ஜெட்டில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருபவர்கள் மன்னவனூர் செல்வதை தவிர்க்கின்றனர்.

மலைப் பயிர்களான கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, மலைப்பூண்டு அதிகம் பயிரிடப்படும் பூம்பாறை பகுதியைக் கடந்துதான், மன்னவனூர் செல்ல வேண்டும். வழிநெடுகிலும் மலை விவசாயம், பசுமை போர்த்திய மலைகள், நீண்டு நெடிய மரங்கள் என வனப் பகுதிகளையும் ரசிக்கலாம். மன்னவனூர் சுற்றுலா மையத்தில் பசுமைக் குடில்கள், சிறுவர்கள் விளையாட புல்வெளி மைதானம், கண்காணிப்பு கோபுரம், சிறிது தூரம் மலைப் பகுதியில் நடந்து சென்றுவர ஒற்றையடிப் பாதை, ஏரியில் மரப்பாலம் என நாள் முழுவதும் பொழுதை போக்கும் அளவு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.

இதில் முத்தாய்ப்பாக உள்ளது பரிசல் சவாரி. கொடைக்கானலுக்கு சுற்றுலா வருபவர்கள் வழக்கமாக நட்சத்திர வடிவிலான ஏரியில்தான் படகு சவாரி செய்வர். இங்கு சற்று மாறுதலாக பரிசல் சவாரி உள்ளது. மன்னவனூர் ஏரியில் அதிகபட்சமாக ஐந்துநபர்கள் வரை பரிசலில் ஏற்றி செல்கின்றனர்.

 இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே பரிசலில் செல்வது புதிய அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு தருகிறது. காரில் வருபவர்கள் மன்னவனூர் சூழல் சுற்றுலாத் தலத்துக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். கொடைக்கானலை சுற்றிப் பார்க்க பஸ்களில் வருபவர்கள், குறைந்த செலவில் சுற்றுலாவை முடிக்க நினைப்பவர்களுக்கு, மன்னவனூர் சுற்றுச்சூழல் மையம் சற்று தள்ளியே உள்ளதால் சென்று வருவதில் சிக்கல் உள்ளது. 

இதனால் மன்னவனூர் சுற்றுலாத் தலத்துக்கு சென்றுவரும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் மினி பஸ்களை இயக்கினால் சாமானியர்களும் மன்னவனூரின் அழகை கண்டு ரசிக்கலாம் என்பதே சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- பி.டி. ரவிச்சந்திரன்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close