[X] Close
 

எச்ஐவி பாதிப்பு குழந்தைகளுக்கு அரசு காப்பகம் அமையுமா?


hiv-affected-kids-kids-home

எச்ஐவி பாதித்த குழந்தைகளுக்காக கோவையில் சமுதாயக்கூடத்தில் செயல்படும் காப்பகம்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 15 May, 2018 12:49 pm
  • அ+ அ-

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எத்தனையோ ஆடம்பர வசதிகளை முன்னிலைப்படுத்தும் கோவை மாநகராட்சி நிர்வாகம், ஆதரவற்ற, எச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு தனி காப்பகத்தை அமைத்துக் கொடுப்பதில் பாராமுகம் காட்டுகிறது. 

எச்ஐவி பாதிப்பு குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், சமூக புறக்கணிப்புகள் தீர்ந்தபாடில்லை. கோவை மாநகராட்சியில் எச்ஐவி நோயால் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளான குழந்தைகள் தங்குவதற்கு பல ஆண்டுகளாக காப்பக வசதி இல்லை. இதைக் கருத்தில் கொண்டு ‘மெர்ஸி ஹோம்’ என்ற தன்னார்வ அமைப்பு அப்பொறுப்பை கையில் எடுத்தது. புலியகுளத்தில் உள்ள சமுதாயக் கூடத்தை குறைந்த வாடகைக்கு மாநகராட்சி நிர்வாகம் கொடுத்தது.

ஆதரவற்று விடப்படும் எச்ஐவி பாதித்த குழந்தைகள் ஏராளமானோர் இங்கு அழைத்து வரப்பட்டு பராமரிக்கப்பட்டனர். ஆனால் எச்ஐவி பாதிப்புக்குள்ளானவர்கள் அங்கு தங்கவைக்கப்படக்கூடாது என அப்பகுதிவாசிகள் பிரச்சினை எழுப்பினர். 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016 டிசம்பரில் சமுதாயக்கூடத்தை புனரமைக்க வேண்டுமெனக் கூறி, அந்த காப்பகத்தை ராமநாதபுரம் சூரியன் வீதியில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடத்துக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது. 

புதிய இடத்துக்கு வந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், அங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த முறை மாற்று இடத்தை அறிவிக்காமலேயே காப்பகத்தை காலி செய்யுமாறு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 

சொந்தபந்தங்கள், குடும்பம் என எந்த ஆதரவும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட குழந்தைகள் உள்பட 25 பேர் இங்கு தங்கியுள்ளனர். மாற்று இடம் வழங்காமல் காலி செய்ய உத்தரவிட்டுள்ளதால், காப்பகம் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு தங்கியுள்ளவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. 

அதிகாரிகளுக்கு கண்டனம்

‘எச்ஐவி பாதிப்புள்ள குழந்தைகளுக்கு மனதளவிலும் பாதிப்பு ஏற்படும்; அடிக்கடி நோய் தீவிரமடையும். எனவே காப்பகம் அவசியம். திடீரென மாற்று இடம் கூட கொடுக்காமல் காப்பகத்தை காலி செய்ய உத்தரவிட்டுள்ளார்கள். குழந்தைகளை எங்கு தங்க வைப்பது என்றால், எங்கேயோ கொண்டு போய் விடுங்கள்; வெளி மாவட்டத்தில் விட்டுவிடுங்கள் என அதிகாரிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது.

பராமரிப்பில் சந்தேகம் இருந்தால் காப்பகத்தை மீட்கலாம். ஆனால் அந்த குழந்தைகளின் நிலை என்ன என்பதை யோசிக்க வேண்டும். மருத்துவ, பாதுகாப்பு வசதிகளில் மேம்படுத்தப்பட்ட ஒரு காப்பகத்தை மாநகராட்சி நிர்வாகம் கட்டமைத்திருந்தால், அந்த குழந்தைகளை அங்கு தங்க வைத்திருக்கலாமே’ என கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கோவையில் எச்ஐவி பாதிப்புக்கு உள்ளான பெற்றோரின் குழந்தைகள் மட்டுமே (நோய் பாதிப்பில்லாத குழந்தைகள்) தங்க 5 தன்னார்வ காப்பகங்கள் உள்ளன. 

நோய் பாதித்த குழந்தைகளுக்கென அங்கீகரிக்கப்பட்ட தனி காப்பகம் இல்லை. இந்த ஒரு காப்பகம் மட்டுமே குறைந்தபட்ச வசதிகளோடு நோய் பாதித்த குழந்தைகளை பராமரித்து வருகிறது. விதிமுறைகளுக்கு உட்பட்ட வசதிகள் இல்லை என்றாலும், இந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடம் இல்லை என்பதால், அது இயங்க அனுமதித்துள்ளோம். மாநகராட்சியோ, அரசோ அனைத்து வசதிகளோடும் ஒரு காப்பகத்தை கட்டமைத்தால் இப்பிரச்சினை தீர வாய்ப்புள்ளது’ என்கின்றனர் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள்.

துறை அலுவலர்கள் மட்டுமல்ல, குழந்தைகள் நலன் கொண்ட அனைவருமே இதையே வலியுறுத்துகிறார்கள். எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு என அரசு காப்பகங்கள் இல்லாதது மிக மோசமான நிலை என்பதே அவர்களது கருத்தாக உள்ளது. 

மிக மோசமான நிலை

கோவை மாவட்ட எச்ஐவி உள்ளோர் நலச்சங்கத் தலைவர் ஆர்.மீனாட்சி கூறும்போது, ‘சமீபத்தில் மனநலம் பாதித்த வடமாநில பெண் ஒருவரை மீட்டு காரமடையில் உள்ள காப்பகத்தில் சேர்த்தோம். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருந்தது தெரிந்ததும் அனுமதி மறுத்துவிட்டார்கள். பிறகு,தேடியபோதுதான் எச்ஐவியால் பாதித்தோருக்கு அரசு காப்பகமோ, அரசால் அங்கீகரிக்கப்பட்ட காப்பகங்களோ இல்லை எனத் தெரியவந்தது.

இது மிக மோசமான நிலை. எச்ஐவி உள்ளவர்களிடம் பாகுபாடு பார்ப்பதில்லை என்பது உண்மை என்றால், அனுமதி மறுக்கப்படக்கூடாது. நோய் பாதிப்பு உள்ளானவர்கள் சாலையோரங்களிலேயே வாழ்ந்து இறக்க வேண்டும் என்பதுதான் நிலை. 

ஒவ்வொரு மாவட்டத்திலும் எச்ஐவி பாதித்தோருக்கு அரசு காப்பகங்கள் அமைக்க வேண்டும். காப்பகங்கள் இருந்தால் தான் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள், இறப்பவர்கள் குறித்து தெரியவரும். பாதிப்பிலிருந்து அவர்களை மெல்ல மெல்ல மீட்கவும் முடியும். கோவை மாநகராட்சி இப்பிரச்சினையை கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்றார்.

வரி செலுத்துவோருக்கு மட்டுமல்ல, ஆதரவில்லாமல் நிர்கதியாய் நிற்பவர்களையும் கவனத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பொலிவுறு நகரமாக மாறப் போகும் கோவை மாநகராட்சிக்கு அதுவே அழகு சேர்க்கும்.

- ர.கிருபாகரன்

தொடர்புடைய செய்திகள்

 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close