[X] Close

உடுமலை அருகே துருவமலை உச்சியில் 100 ஆண்டு கால மழை நீர் சேகரிப்பு தொட்டி


rain-water-harvesting-ancient-method

துருவமலை உச்சியில் காணப்படும் மழை நீர் சேகரிப்பு தொட்டி.

  • kamadenu
  • Posted: 14 May, 2018 12:31 pm
  • அ+ அ-

உடுமலை அருகே 100 ஆண்டுகளுக்கு முன்பே மலை உச்சியில் மழை நீர் சேகரிப்பு தொட்டியை உருவாக்கி நம் முன்னோர்கள் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி அணைக்கு எதிரே அதன் ஆயக்கட்டு பாசனத்தை ஒட்டியே துருவமலை அமைந்துள்ளது. இது சம்புக்கல் கரடு எனவும் அழைக்கப்படுகிறது. இம்மலை உச்சியில் பெருமாள் கோயிலும், மசூதியும் ஒன்றாக அமையப் பெற்றுள்ளது. இவை தவிர்த்து பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுவடுகள் இருப்பது காண்போரை வியக்க வைக்கிறது. 

மலை உச்சியில் கோட்டைச் சுவர்கள் அமையப்பெற்றுள்ளன. அவை காலப்போக்கில் இடிந்து தரைமட்டமாகியுள்ளதற்கான சுவடுகள் உள்ளன. அங்கு பிரம்மாண்டமான மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதனை நீச்சல் குளமாக பயன்படுத்தியிருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. அதற்காக அழகிய செங்கல் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு, அதில் விளக்குகள் வைக்கும் மாடமும் வடிவமைக்கப்பட்டிருப்பது அன்றைய கட்டிடக் கலைக்கு உதாரணமாக திகழ்கிறது.

அங்குள்ள சுயம்பு நீரூற்றில் தற்போதும் நீர் உற்பத்தியாகிறது. முறையான பராமரிப்பில்லாததால் உற்பத்தியாகும் நீர் அசுத்தமடைந்துள்ளது. நம் முன்னோர்கள் தரையில் மழை நீர் சேமிக்க, குளம், குட்டைகளை ஏற்படுத்தினர். ஆனால் மலை உச்சியில் மழை நீர் சேகரிக்க அன்றைய கால கட்டத்திலேயே திட்டமிட்டிருப்பது வரலாற்று அறிஞர்களுக்கு வியப்பை அளித்துள்ளது.

இது குறித்து சூழல் ஆர்வலர் லட்சுமணசாமி கூறியதாவது: இம் மலை உச்சியில் பெய்யும் மழைநீரை இம்மலையின் வடபுறத்தில் குளம் கட்டி அதனை தேக்கி சேமித்து வைக்கும் தொழில் நுட்பத்துடன் சுமார் 10 உயரம், 6 அகலமான செங்கல் சுவர் கட்டப்பட்டுள்ளது. இச் சுவரின் உச்சியில் மாட விளக்கு பீடம் அமைத்து, எண்ணெய் ஊற்றிய தீபங்கள் இரவிலும் வெளிச்சத்துடன் எரியும் வகையில் இக்குளத்தை அமைத்துள்ளனர்.

தற்போதும் மழை பெய்யும் தருணங்களில் இந்த குளத்தில் மழைநீர் நிரம்பி வழிகிறது. மேலும் கோயில் மேற்கு மற்றும் வடக்குப் பகுதியில் 6 அடி உயரத்தில் நீண்ட கோட்டைச் சுவர் இருந்ததற்கான அஸ்திவாரம் காணப்படுகிறது. 

நீண்ட கோட்டை சுவர்கள் மற்றும் கோயில் பிரகாரம், போர் நடந்த சுவடுகளுடன் இடித்து உடைத்த நிலையில் தரைமட்டம் ஆக்கப்பட்ட செங்கற்கள் குவியலாக ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.

கீழே எதிரிகள் யாராவது மலைமீது ஏறி வந்தால் விரட்ட கவுன் என்ற கருவி மூலம் இச் சிறிய கற்களை வீச பயன்படுத்தி இருக்கலாம் என்ற யூகமும் எழுகிறது. 

குளத்துக்கு கிழக்கு பகுதியில் கீழே இறங்கி தெற்கே சென்றால் அரசமரத்தடி ஓரத்தில் ஒரு பெரிய குகை காணப்படுகிறது. தற்போது இக் குகையில் வவ்வால் போல தோற்றம் கொண்ட பட்சிகள் வசிக்கின்றன. இக் குகையில் பல ஆண்டுகளுக்கு முன் போயபல்லா என்ற சித்தர் நீண்ட காலமாக வசித்து வந்ததாகவும், அரியவகை மூலிகைகள் மூலம் தீராத நோயால் தன்னை தேடி வருவோருக்கு சிகிச்சைஅளித்து குணப்படுத்தி வந்தார் எனவும் கூறப்படுகிறது. 

மானுப்பட்டி மற்றும் அமராவதி பகுதியில் உள்ள மக்கள் இச்சித்தரை அடிக்கடி சந்தித்து ஆசிபெறுவர்கள் என இக் கோயிலுக்கு தற்போது வரும் பெரியவர்கள் கூறுகின்றனர். 

இம் மலையை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டிய இடமாகும் என்றார்.

திருப்பூர் வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குநர். சு.ரவிக்குமார் கூறியதாவது: தமிழ் சமூகம் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நீர் மேலாண்மையை கடைபிடித்து வந்ததற்கான வரலாற்று சான்றுகள் ஏராளமாக உள்ளன. கிபி. 10-ம் நூற்றாண்டு முதல் கொங்கு மண்டலத்தை ஆண்ட கொங்குச் சோழர்கள் நீர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தினர். அந்த வகையில் துருவமலை உச்சியில் நீரின் அழுத்தத்தை உணர்ந்து அதனை தாங்கும் வகையில் கட்டுமானத்தை உருவாக்கி இருப்பது வியப்புக்குரியது.

இதன் தொன்மை 400 ஆண்டுகள் இருக்கலாம். இன்றைய கிராம ஊராட்சிகளை நிர்வகிப்போர் இதுபோன்ற முன்னோர்களின் செயல் ஆற்றலை நேரில் கண்டு, இதனை முன்மாதிரியாக வைத்து மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். தொல்லியல் துறையினர் மேற்படி பகுதிகளை ஆய்வு செய்து அதன் உண்மை தன்மைகளை இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

- எம்.நாகராஜன் 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close