[X] Close

சாமானியருக்கு எட்டாக்கனியாகி வரும் கொடைக்கானல்: விடுதிகளில் கட்டண கொள்ளை; போக்குவரத்து நெரிசல்


kodaikkanal-expensive-tourism

கொடைக்கானல் ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்.

  • kamadenu
  • Posted: 14 May, 2018 11:28 am
  • அ+ அ-

தங்கும் விடுதி, உணவகங்களில் கட்டண கொள்ளை, போக்குவரத்து நெரிசல், கூட்டம் காரணமாக பஸ்களுக்காக காத்திருக்கும் நிலை, அடிப்படை வசதிகளற்ற நிலை போன்றவற்றால் கொடைக்கானல் சுற்றுலா பயணம் என்பது சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது. இப்பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அரசு அதிகாரிகள், எதைப்பற்றியும் கவலைப்படாமல் மெத்தனமாக இருக்கின்றனர் என்று புகார் எழுந்துள்ளது.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை இருந்தபோதும், கோடை சீசனில் பயணிகளின் வருகை பலமடங்கு அதிகமாக இருக்கும்.

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து ஒரு சில நாட்களாவது தப்பித்து குளுமையான சூழ்நிலையில் இருக்கவும், இயற்கையின் எழிலை ரசிக்கவும் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் இங்கும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். சிலர் மனம் நொந்து ஊர் திரும்புகின்றனர்.

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்சினையாக உள்ளது. போக்குவரத்தை சீரமைக்க திட்டமிடப்பட்ட ‘மல்டிலெவல் கார் பார்க்கிங்’ திட்டம், கூடுதல் போலீஸாரை நியமிப்பது, வாகனங்களை நிறுத்த போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்துவது ஆகிய ஆலோசனைகளை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை.

இதனால், நெடுந்தூரத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பல மணிநேரம் காத்திருந்து மனம் வெறுத்துப்போய் அனைத்து இடங்களையும் பார்க்க முடியாமல் பாதியிலேயே ஊர் திரும்புகின்றனர்.

விலைப்பட்டியல் இல்லை

கொடைக்கானல் நகரில் உள்ள எந்த உணவகங்களிலும் விலைப்பட்டியல் இல்லை. சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கும்போது அதிக தொகை கேட்கும் உணவகத்தை சேர்ந்தவர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

உள்ளூர்காரர்களாக இருந்தால் ஒரு விலையும், சுற்றுலா பயணிகளுக்கு ஒரு விலையும் நிர்ணயிக்கின்றனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து உணவகங்களிலும் விலைப்பட்டியலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது.

விடுதிக்கட்டணம் உயர்வு

சீசன் நேரத்தில் கூட்டம் அதிகம் காரணமாக விடுதிக்கட்டணம் சற்றே உயர்வது இயல்பு. ஆனால், சமீப ஆண்டுகளாக விடுதி கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது. சாதாரண நாட்களில் ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விடப்படும் அறைகள், சீசன் நேரத்தில் 2,000 ரூபாய்க்கு விடப்படுகிறது. இதை கட்டுப்படுத்த அரசின் எந்த துறையும் முன்வருவதில்லை.

கொண்டுவந்த பணத்தில் பெரும் பகுதி தங்கும் விடுதி வாடகைக்கே செலவாகிறது. கூட்டம் அதிகம் காரணமாக இரவில் இயக்கப்படும் கடைசி பஸ்களில் இடம் கிடைக்காமல் காத்திருக்கும் பயணிகள், விடுதிக் கட்டணம் அதிகமாக இருப்பதன் காரணமாக பஸ்நிலைய வளாகத்திலேயே நடைமேடையில் இரவு குளிரில் தூங்கிச் செல்லும் நிலை காணப்படுகிறது.


பஸ்சில் இடம் கிடைக்காததால், கொடைக்கானல் பஸ்நிலையத்தில் நடைமேடையில் தூங்கும் சுற்றுலா பயணிகள்.

அடிப்படை வசதிகள் இல்லை

போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால் சுற்றுலாவரும் மகளிர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் பெட் பாட்டில்களை வாங்கி பயன்படுத்திவிட்டு ஆங்காங்கே தூக்கி எறிந்துவிட்டு செல்கின்றனர். இதனால் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் குவியல்கள் அதிகரிக்கிறது.

கொடைக்கானலுக்குள் நுழையும்போதே டோல்கேட்டில் வாகன கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் வசூலாகும் இந்த தொகையில் ஒரு சிறிய பகுதியை சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகளுக்கு செலவிடலாம். இதேபோன்று, கோக்கர்ஸ் வாக், மோயர் பாய்ண்ட், குணா குகை என சுற்றுலா இடங்களில் நுழைவு கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம் ஆகியவற்றின் மூலம் நகராட்சிக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. ஆனால், அப்பணத்தை அடிப்படை வசதிகளை மேம்படுத்த செலவிடப்படுவதில்லை என சுற்றுலா பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

பெயரளவில் சுற்றுலாத்துறை

கொடைக்கானலில் செயல்படும் சுற்றுலாத்துறைக்கு பஸ்நிலையத்தில் அலுவலகம் இல்லை. புதிதாக கொடைக்கானல் வருபவர்கள் சுற்றுலா குறித்து விசாரித்து அறிய ஒரு அவுட்போஸ்ட் கூட அமைக்காமல் உள்ளனர். இதனால் பலரும் போலியான நபர்களிடம் சிக்கி ஏமாறுவது தொடர்கிறது. இந்த துறையும் படகு சவாரி வசூல், தமிழ்நாடு ஹோட்டல் வருவாய் என வருவாயை குறிவைத்துதான் இயங்குகிறது. 

கொடைக்கானலில் சுற்றுலா வளர்ச்சிக்கு என குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பெரிய அளவில் அரசு நிதி ஒதுக்கீடு செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது கோடைவிழா நடத்துவதற்கான நிதியை கூட இதுவரை அரசு தரவில்லை என்கின்றனர். அதிக செலவு செய்ய வேண்டிய அதே நேரத்தில், போதிய அடிப்படை வசதிகளும் இல்லாத இதே நிலை நீடித்தால் விரைவில் கொடைக்கானல் சுற்றுலா என்பது சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும்.

வசதியுள்ளவர்கள் மட்டுமே கொடைக்கானல் வந்து செல்ல முடியும் என்ற நிலைக்கு சிறுக சிறுக மலைகளின் இளவரசி மாறி வருகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் சுற்றுலா பயணிகள் நிம்மதியாக கொடைக்கானல் வந்து செல்லமுடியும். இதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- பி.டி.ரவிச்சந்திரன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close