தனுஷ்கோடியில் இலங்கை செல்போன் சிக்னல்கள்: பாதுகாப்புத் துறை கவனத்துக்கு கொண்டுசெல்ல அமைச்சர் உறுதி

தலைமன்னாரில் உள்ள செல்போன் டவர்
தனுஷ்கோடியில் இலங்கை செல்போன் நிறுவனங்களின் சிக்னல்களை கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்புத் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம். மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
1978-ம் ஆண்டு ராமேசுவரத்திலும், தலைமன்னாரிலும் 100 மீட்டர் டிரான்ஸ்மிஷன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொலைபேசி சேவை அளிக்கப்பட்டது. 1983-ல் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் இந்த கோபுரங்கள் மூலம் தொலைபேசி சேவையை வழங்குவது தடைபட்டது. 1988 -ம் ஆண்டில் இந்திய அமைதிப் படை இலங்கைக்குச் சென்றபோது டிரான்ஸ்மிஷன் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
பின்னர் 2007-ம் ஆண்டில் ராமேசுவரத்தில் இருந்த பி.எஸ்.என்.எல். மற்றும் தனியார் செல்போன் நிறுவன கோபுரங்களின் சிக்னல் இலங்கை வரை எட்டியது. இதனை விடுதலைப் புலிகளும் பயன்படுத்தியதால் ராமேசுவரத்திலுள்ள செல்போன் டவர்களின் அலைக்கற்றை வீச்சின் சக்தியைக் குறைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.
இலங்கையில் தொலைத்தொடர்புத் துறை தனியார் மயமாக்கப்பட்ட பின்னர், பிரபல இந்திய தனியார் செல்போன் நிறுவனங்கள் பல இலங்கையில் தங்களின் சேவைகளை வழங்கி வருகின்றன.
தற்போது மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களின் செல்போன் டவர்களின் அலைக்கற்றை வீச்சு தனுஷ்கோடியில் துல்லியமாக கிடைக்கிறது. இவற்றின் உதவியுடன் தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இந்தியா- இலங்கை கடத்தல்கார்கள் இரு நாட்டு கடற்படையிடமிருந்தும் தப்புவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம். மணிகண்டனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தனுஷ்கோடியில் இலங்கையில் உள்ள செல்போன்களின் சிக்னல் கிடைக்கிறது என்ற தகவல் இன்றுதான் எனக்குத் தெரிய வருகிறது. இலங்கை செல்போன் சிக்னல்கள் பாதுகாப்புக் குறைபாடுகள் ஏற்படவோ, கடத்தல்காரர்கள் மற்றும் சமூக விரோதிகளுக்கு வசதியாகவோ இருக்கும் என நினைக்கிறேன்.
இந்த சிக்னல்களை கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்புத் துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- எஸ். முஹம்மது ராஃபி