[X] Close

வேலூர் தேர்தல் ரத்தால் தமிழகத்துக்கே தலைக்குனிவு: தமிழிசை காட்டம்


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 17:19 pm
  • அ+ அ-

வேலூர் தேர்தல் ரத்தால் தமிழகத்துக்கே தலைக்குனிவு ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவரும் தூத்துக்குடி தொகுதி வேட்பாளருமான தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்குப் பதிலளித்த தமிழிசை, ''பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்களின் வீட்டில் பணம் இருந்திருக்கலாம். வருமான வரித்துறை எந்த ஆதாரமும் இல்லாமல் வராது. ஏன் பயப்படுகிறார்கள்? இல்லையென்றால் இல்லையென்று சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே?

துரைமுருகனின் நண்பர்கள் வீட்டில் கண்டுபிடித்த பணத்துக்கு இவர்களின் பதில் என்ன? தூத்துக்குடியில் பணமே விளையாடவில்லை என்று இவர்களால் சொல்லமுடியுமா? நேர்மையான அரசியல் செய்துகொண்டிருக்கிறேன். என்னிடம் கோடியாக கோடியாக இருக்கிறது என்றுகூறி ஸ்டாலின் இதில் விளையாட வேண்டாம்.

வெள்ளை கோட் போட்டு கோடி கோடியாய் சம்பாதிப்பதை விடுத்து, அரசியலில் இருக்கிறேன். உங்களைப் போல அல்ல. அதனால் கொஞ்சமாவது ஆதாரத்துடன் பேசுங்கள்.

வேலூரில் தேர்தலை ரத்து செய்ததற்கு ஆதாரம் உள்ளது. தூத்துக்குடியில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. கனிமொழி தோல்வி பயத்தால் தேர்தலை நிறுத்தவேண்டும் என்று ஆசைப்படலாம். இவர்கள் வேலூர் சம்பவத்துக்குப் பதில் சொல்லிவிட்டு தூத்துக்குடிக்கு வரட்டும்.

இந்தியா முழுவதும் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதிக்கு மட்டும் திமுகவால் ரத்து செய்யப்பட்டது எவ்வளவு பெரிய தலைக்குனிவு? நீங்கள் தலைநிமிர்கிறோம் என்று விளம்பரம் செய்கிறீர்களே, துரைமுருகன் வீட்டில், ஒரு கட்சியின் பொருளாளர் வீட்டில் பணம் எடுக்கப்பட்டது தலைக்குனிவுதானே!

அது கட்சியின் பணமா, துரைமுருகனின் பணமா? யாரின் பணம் என்று ஸ்டாலின் விளக்கட்டும். இந்தியாவிலேயே தமிழகம் தலைகுனியும் அளவுக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டாலின்,கனிமொழியின் பதில் என்ன?'' என்றார் தமிழிசை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close