[X] Close

நடுநிலையாக செயல்படுவதால் அச்சுறுத்தல், உயிருக்கு பாதுகாப்பில்லை: தேர்தல் ஆணையத்திடம் கரூர் மாவட்ட ஆட்சியர் புகார்


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 07:38 am
  • அ+ அ-

நடுநிலையாக செயல்படுவதால் அச்சுறுத்தல், உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது என கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.அன்பழகன் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் சிலர் நடந்தகொள்கின்றனர். ஏப்.15-ம் தேதி (நேற்று முன்தினம்) நள்ளிரவு 11.45 மணிக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி உத்தரவின்பேரிலும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அறிவுறுத்தலின்பேரிலும், வழக்கறிஞர் செந்தில் உள்ளிட்டோர் என் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டதுடன் வீட்டுக்குள் நுழைய முயன்றனர்.

30 வாகனங்களில் 100 பேர்

அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு குறைகள் இருந்தால் காலையில் அலுவலகத்துக்கு வந்து மனு அளியுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்றேன். முடியாது இங்கேயேதான் இருப்போம் என்றனர். அப்போது, சுமார் 100 பேர் சுமார் 30 இரு சக்கர வாகனங்களிலும், நான்கைந்து 4 சக்கர வாகனங்களிலும் வந்திருந்தனர். என் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததுபோல அச்சுறுத்தும் வகையில் வீட்டுக்குள் நுழைய முயன்றனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளேன்.

அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் நடுநிலையாக பணி செய்யவிடாமல் தடுத்துக்கொண்டு உள்ளனர். நடுநிலையாக தேர்தலை நடத்தவேண்டிய சூழலில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்வது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளேன். மேலும், காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளேன். இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் வந்து, வீட்டை முற்றுகையிட்டிருந்தவர்களிடம் இருந்து என்னை மீட்டார்.

இதேபோல, கடந்த 14-ம் தேதி கரூர் கோட்டாட்சியரை 6 மணி நேரம் அவரது அலுவலகத்திலே சிறைப்பிடித்து வைத்திருந்தனர். இது எந்த வகையில், ஜனநாயக முறையில் நியாயம் என தெரியவில்லை. சரியாக நடக்க அதிகாரிகளை அனுமதித்தால் நடுநிலையாக தொடர்ந்து செயல்படுவோம். விதிமீறல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம், காவல்துறை, காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளேன். தேர்தல் ஆணையத்தின் உத்தரவு அடிப்படையில் செயல்படுவோம்.

வழக்கறிஞர் செந்தில் பேசிய ஆடியோ ரெக்கார்டிங் உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் போனில் பேசியபோது, தயவுசெய்து ஆட்களை அனுப்பி மிரட்டாதீர்கள் எனக்கூறி மறுப்பையும், எதிர்ப்பையும் தெரிவித்தேன். அதற்கு அவர், தொடர்ந்து பாரபட்சமாக செயல்படுவதாக புகார் தெரிவித்தார். நடுநிலையாக செயல்படுகிறோமா, இல்லையா என்பதை மக்கள் அறிவார்கள்.

இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து என்னை மிரட்டி கெரோ செய்தால் எனக்கும், என் குடும்பத்துக்கும் என்ன பாதுகாப்பு உள்ளது? தேர்தலை நடத்தும் அலுவலருக்கே இந்த நிலை என்றால், சாமானியர்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் உள்ளது. இப்படி நிர்பந்தித்தால் தேர்தலை எப்படி நியாயமாக நடத்துவது. நடுநிலையாக இருக்கும் ஒரே காரணத்துக்காக மிரட்டினால் எப்படி ஏற்றுக்கொள்வது.

இறுதிக்கட்ட பிரச்சார இடம், நேர ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்னை சந்தித்து மனு அளித்த நிலையில் அதுதொடர்பாக எதிர்க்கட்சியினர் மேல்முறையீடு செய்யவேண்டும் என்றால் இரவு 11.45 மணிக்கு 100 பேர் கொண்ட கும்பலாகவா வருவது?. இதனால் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல், உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆன்லைனில் முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கே தேர்தல் பிரச்சாரத்துக்கு முதலில் அனுமதி வழங்கப்படுகிறது. கரூர் கோட்டாட்சியர் முறையாக அனுமதி வழங்கிய நிலையில், தொழில்நுட்ப ரீதியாக சிலவற்றைக் கூறி கரூர் கோட்டாட்சியரை 6 மணி நேரம் சிறைப்பிடித்து நிர்ப்பந்தித்ததன் அடிப்படையில் திமுகவினர் அந்த அனுமதியை மாற்றியுள்ளனர். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. தேர்தல் ஆணையத்தில் எனக்கு பாதுகாப்பு கேட்டுள்ளேன். எனது சூழ்நிலையைத் தெரிவித்துள்ளேன். இங்குள்ள நிலை குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளேன் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close