[X] Close

பணப்பட்டுவாடாவை தடுக்கும் குழுக்களை கண்காணிக்க டிஆர்ஓ தலைமையில் கட்டுப்பாட்டு அறை


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 07:32 am
  • அ+ அ-

தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா, மதுபானம், பரிசுப் பொருட்கள் விநியோகத்தை தடுக்க அமைக்கப்பட்ட படைகளை கண்காணிக்க, 2 மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) தலைமையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பு:மக்களவை பொதுத் தேர்தலுக்காக ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் சட்டவிரோத பண பரிவர்த்தனைகள், மதுபானம் அல்லது இதர பரிசுப் பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை கண்காணிக்கும் பொருட்டு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பண விநியோகம், அதிகளவிலான பணத்தை பதுக்குதல் சட்டவிரோத மது விற்பனை, சந்தேகத்துக்கு இடமான பொருட்கள், ஆயுதங்கள் வைத்திருப்பதை கண்காணிக்க நிலை கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள்படி, மக்களவை பொதுத்தேர்தலுக்காக பறக்கும் படை வாகனங்கள், நிலை கண்காணிப்புக் குழு வாகனங்கள் மற்றும் வாக்கு இயந்திரம், வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மாநில அளவிலான கட்டுப்பாட்டு மையம் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. வாகன கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க 2 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தற்காலிகமாக கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கட்டுப்பாட்டறையில் வாகன இயக்கங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்ட பணியாளர்களை கண்காணித்து வருகின்றனர்.

இவர்கள் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையின் உதவியுடன் செலவின கண்காணிப்பு மற்றும் அதன் பிரச்சினைகளை தீர்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர். ‘கருடா’ என்ற வலைப்பக்க சேவை மற்றும் செயலி மூலம் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்த ‘கருடா’ அமைப்பு மூலம் மைய அளவிலான கட்டுப்பாட்டு மையம், மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு மையமும் 2 ஆயிரத்து 89 வாகனங்களின் இயக்கம் மற்றும் செயல்களை ஆன்லைன் மூலம் கண்காணித்து வருகிறது. பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுவுக்கு வழங்கப்பட்ட கருடா செல்போன் செயலியில் தினசரி பறிமுதல் செய்யப்படும் விவரங்களை உள்ளீடு செய்யும் வசதி உள்ளது. உள்ளீடு செய்யப்பட்ட விவரங்கள் தலைமை தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகம் அளவில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close