[X] Close

மதுராந்தகம் அருகே கே.கே.புதூரில் செயல்படும் மருத்துவ கழிவுகளை எரிக்கும் ஆலையால் நோய் பாதிப்பா?- ஆய்வு செய்ய கிராம மக்கள் கோரிக்கை


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 07:29 am
  • அ+ அ-

மதுராந்தகம் அருகே உள்ள கே.கே.புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாகி வருவதாகவும், இதற்கு இப்பகுதியில் இயங்கி வரும் மருத்துவக் கழிவுகளை எரிக்கும் ஆலை காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் கூறி, இப்பகுதி பெண்கள் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து சுகாதாரத் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மதுராந்தகம் அருகே உள்ள கே.கே.புதூரில் கடந்த 9 ஆண்டுகளாக பயோ மெடிக்கல் கழிவுகளை அழிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து எரித்து அழிக்கின்றனர். இவ்வாறு அழிக்கும்போது வெளியேறும் நச்சுப் புகையால் இந்த கிராமம் மட்டுமின்றி அருகில் உள்ள இருசாமநல்லூர்,கினார், தோட்டநாவல் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆலையை மூடக் கோரி கடந்த 2-ம் தேதி இக்கிராம மக்கள் போராட்டத்தைத் தொடங்கினர். இவர்கள் 15-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பெண்கள் சிலர் கூறும்போது, ‘‘இந்த ஆலை முதலில் தொடங்கும்போது எங்களுக்கு பாதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு பாதிப்புகள் உருவாகி வருகின்றன. தோல் நோய், மூச்சுத் திணறல் போன்ற நோய்கள் அதிகம் வருகின்றன. ஒரு குழந்தையின் உடல் தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு தனியார் மருத்துவமனை சார்பில் வந்த டாக்டர்கள் இந்தப் பகுதியில் 40 பேருக்கு சோதனை நடத்தினர். அவர்கள் இங்கு 5 பேருக்கு புற்றுநோய்க்கான அறிகுறி இருப்பதாக கூறியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நோய்களுக்கு அந்த ஆலை வெளியிடும் புகைதான் காரணமா என்பது குறித்து சுகாதாரத் துறை ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து இந்த மருத்துவக் கழிவு ஆலையின் பராமரிப்புப் பிரிவு பொறுப்பாளர் கிரசந்த்குமாரிடம் கேட்டபோது, ‘‘இந்த ஆலையை அரசுடன் இணைந்து நடத்தி வருகிறோம். மருத்துவக் கழிவுகளை வேறு இடங்களில் கொட்டினால் சுகாதாரம் பாதிக்கப்படும் என்பதால் இங்கு அதை எரித்து அழிக்கிறோம். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளுக்கு உட்பட்டே இங்கு பணிகள் நடைபெறுகின்றன இந்த ஆலை கடந்த 9 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் இக்கிராமத்துக்கும், மக்களுக்கும் உதவிகளைச் செய்ய தயாராக உள்ளோம். ஆனால் சிலர் தங்களின் சுய லாபத்துக்காக உள்நோக்கத்தோடு அப்பாவி மக்களைப் போராட்டத்துக்கு தூண்டிவிடுகின்றனர்’’ என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close