[X] Close

கரூர் பேருந்து நிலையத்தில் பிரச்சாரத்தை முடிக்க திமுக - அதிமுக போட்டாபோட்டி: மோதலில் முடிந்தது


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 18:01 pm
  • அ+ அ-

கரூரில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இரு கட்சியினரும் ஒரே இடத்துக்கு உரிமை கோரியதால் பிரச்சாரம் மோதலில் முடிந்தது.

கரூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தம்பிதுரையும், திமுக சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் களம் காண்கின்றனர்.

இந்நிலையில் இன்று இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இரு கட்சியினரும் ஒரே இடத்துக்கு உரிமை கோரியதால் பிரச்சாரம் மோதலில் முடிந்தது.

கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய திமுக சார்பில் அனுமதி கோரப்பட்டது. அதே இடத்தில் மாலை 3 முதல் 5 மணி வரை பிரச்சாரம் செய்ய அதிமுக சார்பில் கோரப்பட்டது. இந்த சர்ச்சை வலுக்கவே திமுக - காங்கிரஸ் நீதிமன்றம் வரை சென்றது. இதற்கிடையில் கரூர் பேருந்து நிலையத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய அனுமதி கோரி திமுகவினர் தன்னை மிரட்டுவதாக கரூர் ஆட்சியர் அன்பழகன் பரபரப்பு புகார் தெரிவித்தார்.

கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி இன்று மதியம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரூர் தொகுதியில் நடந்துகொண்டிருப்பது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரமல்ல. யுத்தம்! நமது இறுதிக்கட்டப் பிரச்சாரம் திட்டமிட்டபடி மாலை 4- 6 மணிவரை பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் நடைபெறும். இதற்கான நீதிமன்ற உத்திரவினைப் பெற்றிருக்கிறோம். அதிகாரத்தை விட,அராஜகத்தை விட உண்மை வலிமையானது" எனப் பதிவிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில் இரண்டு கட்சிகளுக்குமே அனுமதி இல்லை என நிராகரிக்கப்பட்டது.

இதனால், கரூர் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வெங்கமேடு பகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். வெங்கமேடு ஐயப்பன் கோயில் பகுதியில் பிரச்சாரம் தொடங்கியது.

அதே வேளையில் காங்கிரஸ்-திமுகவினர் வெங்கமேடு அண்ணா சிலையிலிருந்து இறுதிக்கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கினர். சிறிது நேரத்தில் இரு கட்சியினரும் சந்தித்துக் கொள்ள மோதல் ஏற்பட்டுள்ளது.

நாஞ்சில் சம்பத் இருந்த வாகனத்தை அதிமுகவினர் கொடி கம்பால் அடிக்க கண்ணாடி உடைந்தது. ஆனால் அவருக்கு சேதம் ஏற்படவில்லை. இருதரப்பினர் இடையேயான மோதலில் காவலர் ஒருவர் பெண்கள் சிலர் என மொத்தம் 10 பேர் காயமடைந்தனர்.

கரூர் பேருந்து நிலையம் சர்ச்சைக்குரிய இடமானதால் திடீரென பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close