[X] Close

தமிழகத்தில் தேசிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் சின்னம் கை கொடுக்குமா?


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 11:16 am
  • அ+ அ-

-என்.சன்னாசி,

தமிழகத்தில் மாநில கட்சிகளின் சின்னம் பிரபலமான தொகுதிகளில் தேசிய கட்சிகளின் சின்னம் அவர்களுக்கு கை கொடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் பாஜக 5, பாமக 7, தேமுதிக 5, தாமாக 1, புதிய தமிழகம் 1 தொகுதிகள் என 20 தொகுதிகளிலும், அதிமுக 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் தலா 2 தொகுகளிலும், விடுதலை சிறுத்தை கள் 2, மதிமுக, இந்திய தேசிய லீக், ஐஜேகே கட்சிகள் தலா ஒன்றிலும், திமுக 20 இடங்களிலும் களமிறங்கியுள்ளன.

கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் அதிமுக, திமுக நேரடியாக மோதும் இடங்களில் அவ்விரு கட்சியினரும் தீவிர தேர்தல் பணி புரிகின்றனர். கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தொகுதிகளில் அதிமுக, திமுகவுக்கு தேர்தல் பணியாற்றுவதில் மந்தநிலை உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

தேர்தல் பணிக்கான செலவுகளை ஈடுகட்ட முடியாமல் கூட்டணிக் கட்சியினரை நாட வேண்டிய சூழலால் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை என்ற புகாரும் உள்ளது. இதனிடையே கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் இடத்தில் சின்னம் முக்கியத்துவம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான கிராமங்களில் இரட்டை இலை, உதயசூரியன், மாம்பழம், சைக்கிள் உள்ளிட்ட மாநில கட்சிகளின் சின்னங்களுக்கே வாக்களித்துப் பழகியவர்கள், தேசிய கட்சிகள் போட்டியிடும் 14 தொகுதிகளில் சின்னம் கை கொடுக்குமா என்ற சந்தேகம் உள்ளது.

இது குறித்து தேசிய கட்சி ஒன்றின் மாவட்ட நிர்வாகி மலையேந்திரன் கூறியது:

மேல்சபை என்றால் கைச் சின்னம், கீழ் சபை எனில் இலை, உதயசூரியன் என ஒரு காலத்தில் மக்கள் மனதில் மாநில கட்சிகளின் சின்னம் பதிவாகி இருந்தது. தற்போது அப்படி இல்லை. கிராம மக்கள் விழிப்புணர்வுடன் வாக்களிக்கின்றனர்.

தேர்தலுக்கு முன்பே எந்த சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கட்சியினரும் விழிப்பு ஏற்படுத்துகின்றனர். மீடியா, சமூக வலைதளங்களால் ஈர்க்கப்படுகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு சின்னங்கள் இருந்தாலும், குழப்பமின்றி தங்களுக்கான சின்னத்தில் வாக்களிக்கின்றனர்.

மாநில கட்சிகளின் சின்னங்கள் பிரபலமான தொகுதிகளிலும் குழப்பமின்றி தேசிய கட்சிகளின் சின்னங்களுக்கு வாக்களிப்பர். ஒருசில தொகுதிகளில் இக் குழப்பம் இருக்கலாம் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close