[X] Close

புதுச்சேரி, நெய்வேலி இளைஞர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 11:07 am
  • அ+ அ-

மூன்றாவது முயற்சியில் சிவில் சர்வீஸ் தேர்வில் வென்றுள்ளார் புதுச்சேரி அரசு ஊழியர் ஸ்ரீராம் (25).

புதுச்சேரி முதலியார்பேட்டை பிஎஸ்சி வங்கி காலனியைச் சேர்ந்த ஸ்ரீராம், தற்போது மின்துறையில் மேல்நிலை எழுத்தராக உள்ளார். பணியில் இருந்தவாறே சிவில் சர்வீஸ் தேர்வில் 453 இடத்தை பிடித்து தேர்வாகியுள்ளார்.

தேர்வில் வென்றது தொடர்பாக அவர் 'இந்து தமிழ் திசை'யிடம் கூறியது:

தந்தை ராகவன் மாநில கூட்டுறவு வங்கி மேலாளர். தாய் சுமதி அரசு பள்ளி ஆசிரியை. புதுச்சேரியில் பெத்தி செமினாரில் பிளஸ் 2 வரை பிடித்து விட்டு, வேலூரில் பொறியியல் படிக்க தொடங்கினேன். திடீரென்று சிவில் சர்வீஸ் தேர்வு பற்றி தெரிந்து, அதில் ஆர்வம் ஏற்பட்டது. எனக்கு பிடித்தமான வரலாறு பாடங்களை படிக்கத் தொடங்கினேன். பொறியியல் முடித்து பெங்களூரில் பணியில் இருந்த போது, சிவில் சர்வீஸ் ஆர்வத்தால் அப்பணியை ராஜினாமா செய்து விட்டு புதுச்சேரி திரும்பினேன்.

பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை செயல்பாட்டு கழகம் சார்பில் நடத்திய சிவில் சர்வீஸ் பயிற்சிக்கான தேர்வில் வென்று சென்னைக்கு பயிற்சி பெற சென்றேன்.

இதன் இடையே புதுச்சேரி மி்ன்துறையில் எனக்கு மேல்நிலை எழுத்தராக பணி கிடைத்தது. பணியில் இருந்தபடியே தேர்வுக்கு தயாரானேன். முதல்முறை தோல்வியடைந்தேன். அதில் இருந்து பாடம் கற்று, இரண்டாவது முறை நேர்முகத்தேர்வு வரை சென்று தோல்வியடைந்தேன்.

இருமுறை தோல்வியில் கற்ற பாடங்களை கொண்டு மூன்றாவதாக இம்முறை சிவில் சர்வீஸ் தேர்வில் வென்று 453வது இடம் பிடித்துள்ளேன். பொறியியல் படித்திருந்தாலும் மூன்று முறையும் எனது விருப்பப் பாடமாக நான் தேர்ந்தெடுத்தது வரலாறு பாடத்தைத்தான்.

எனக்கு மிகவும் பிடித்தது ஐஎப்எஸ்தான். எனது ரேங்குக்கு கண்டிப்பாக அப்பணியிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன். உண்மையான விருப்பமும், ஆர்வமும் நம் கனவை நனவாக்கும் என்கிறார் இயல்பாக.

கடலூர்

இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் நெய்வேலியைச் சேர்ந்த பிரதிவிராஜ் (24) அகில இந்திய அளவில் 481-வது இடமும், தமிழக அளவில் 12-ம் இடமும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர் நெய்வேலி ஜவகர் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். பொறியியல் படிப்பை கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் 2016-ம் ஆண்டு முடித்துள்ளார். இவரது தந்தை மதியழகன் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதல் சுரங்கத்தில் கூடுதல் துணை முதன்மை மேலாளராக பணியாற்றி வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டம் சின்னக்குப்பியம் கிராமத்தைச் சேர்ந்த இவர் குடும்பத்துடன நெய்வேலியில் வசித்து வருகிறார்.

இதுதொடர்பாக பிரதிவிராஜ் கூறுகையில், “பள்ளி மாணவர்கள் இளமைப் பருவத்தில் நாளிதழ்கள் படிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். எந்த ஒரு பாடத்தையும் விட்டு விடாமல் கவனமுடன் உணர்ந்து படிக்க வேண்டும். ஆசிரியர்கள் சொல்லித்தரக் கூடிய பாடங்களை அன்றே படித்து வர வேண்டும். நான் தேர்வில் வெற்றிபெற எனது குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்கள் ஊக்கம் அளித்தனர் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close