[X] Close

தேர்தல் திருவிழா இன்றோடு முடிகிறதே! - கிராமப் புற பெண்கள், மினி டெம்போ ஓட்டுநர்கள் வருத்தம்


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 11:02 am
  • அ+ அ-

கடந்த சில வருடங்களாக தேர்தல் என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களை கட்டுவது வாடிக்கையாகி விட்டது. மக்களவைத் தேர்தலானாலும், சட்டப்பேரவைத் தேர்தலானாலும் சரி ஆட்டோ மற்றும் ஒலி ஒளி அமைப்பு தொழிலாளர்கள் பரபரப்பாகி விடுகின்றனர்.

அதைத்தொடர்ந்து பந்தல் மேடை அமைப்பாளர்களும் பிஸியாவது உண்டு. அந்த வகையில் இந்தத் தேர்தலில் இருந்து கிராமப்புற பெண்களும் பிஸியாகி விடுகின்றனர். அரசியல் தலைவர்களின் பேச்சுகளை கேட்க, ஆர்வமாக கூடிய காலமெல்லாம் மலையேறி விட்டது. மக்களை காசு கொடுத்து அழைத்து வந்து, கட்டாயப் பேச்சு கேட்கும் நிலை உருவாகி விட்டது.

அவ்வாறு அழைத்து வரப்படும் பொதுமக்கள் கிராமப்புறங்களில் இருந்து மினி டெம்போக்களில் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்கு 100 ரூபாய் அல்லது ஒரு புடவை வழங்கப்படுகிறது. கிராமப்புற பெண்களும் வீட்டில் சும்மா தானே இருக்கிறோம் என்று, கட்சி பேதம் பாராமல் கூட்டங்களுக்குச் சென்று வருகின்றனர்.

தியாகதுருகத்தில் நேற்று முன்தினம் கட்சி ஒன்றின் பிரச்சாரத்திற்கு வந்திருந்த கள்ளக்குறிச்சியை அடுத்த படவாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி கூறும்போது, '' அனைத்து கூட்டத்துக்கும் போவோம். போனால் 100 ரூபாய் தருவாங்க! சாப்பாடு தண்ணியெல்லாம் கிடையாது. வீட்ல சும்மா இருப்பதற்கு இப்படி வர்றோம். இன்னும் 2 நாட்கள் தானாம். அதுக்கப்புறம் இது மாதிரி கூட்டிட்டு போக மாட்டாங்களாம். தேர்தலை கொஞ்சம் தள்ளி வைச்சிருந்தாங்கன்னா, இன்னும் கொஞ்சம் காசு பார்த்திருப்போம்'' என்றார்.

திட்டக்குடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன் கூறும்போது, ''சராசரியாக மாதம் ரூ.20 ஆயிரம் கிடைக்கும். தேர்தல் அறிவித்ததில் இருந்து, இரட்டிப்பு வருமானம். எனக்கு மட்டுமில்லை, மினி டெம்போ வாகன ஓட்டிகளுக்கும் தான்'' என்றார். ஒலி, ஒளி அமைப்பாளர் செந்தில் கூறுகையில், கோடை மற்றும் மழைநாட்களில் எங்கள் தொழில் டல்லாக இருக்கும்.இந்த வருடம் தேர்தல் வந்து வருமானத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறது என்றார்.

சங்கராபுரத்தைச் சேர்ந்த பறையிசைக் குழு நிர்வாகி சிங்காரம் கூறுகையில், ''கடந்த கால தேர்தல்களை விட, இந்தத் தேர்தலில் அனைத்துக் கட்சியினரும் பறையிசையைப் பயன்படுத்தினர். இதனால் எங்களுக்கு நல்ல வருமானம்'' என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close