[X] Close

அரூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்; மும்முனைப் போட்டியில் வெற்றி யாருக்கு?


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 11:04 am
  • அ+ அ-

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவை தொகுதிகளில் ஒன்று அரூர் (தனி) தொகுதி. 1951-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியின் தற்போதைய வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்து 33 ஆயிரத்து 18. இவர்களில், ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 638, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 374, மூன்றாம் பாலினத்தவர் 6 பேர்.

இதுவரை இந்த தொகுதியில் சுயேச்சை ஒரு முறையும், காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தலா 3 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு முறையும் வென்றுள்ளன. கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு  வென்ற ஆர்.முருகன், டிடிவி தினகரன் அணிக்கு  சென்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனவே, அரூர் தொகுதிக்கும் தற்போது இடைத் தேர்தல் நடக்கிறது.

தற்போது அதிமுக சார்பில் சம்பத்குமார், திமுக சார்பில் கிருஷ்ணகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இரு வருமே தொகுதியில் பெரிய அளவில் அறிமுகம் இல்லாதவர்கள் என்றபோதும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.

அமமுக சார்பில்

ஆர்.முருகன் மீண்டும் வேட்பாள ராக நிறுத்தப்பட்டுள்ளார். இதுதவிர, நாம் தமிழர் கட்சி சார்பில் திலீப் வேட்பாளராக உள்ளார். அதிமுக தரப்பில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை அமமுக வேட்பாளர் ஆர்.முருகன் பெறுவார் எனத் தெரிகிறது. இந்த சூழல் திமுக வேட்பாளருக்கு  சாதகமான நிலையை ஏற்படுத்துகிறது.

அதேநேரம், அதிமுக, திமுக  வேட்பாளர்கள் இருவருமே பலமான கூட்டணி கட்சிகளுடன் களத்தில் உள்ளனர். விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி  உள்ளிட்ட கட்சிகளும் இந்த தொகுதியில் கணிசமான வாக்கு  வங்கியைக் கொண்டுள்ளன. இது, திமுக வேட்பாளருக்கு சாதகமாக வாய்ப்பு உள்ளது. அதேபோல, பாமக, தேமுதிக, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சிகளுக்கும் இந்த தொகுதியில் கணிசமான வாங்கு  வங்கி உள்ளது. இது, அதிமுக வேட்பாளருக்கு  கூடுதல் பலமாகும்.

தொகுதியின் தேவைகள்

இந்த தொகுதியின் பெரும்பகுதி வாக்காளர்கள் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். மண் வளம் இருந்தபோதும் நீர்வளம் போதாத நிலையில்தான் உள்ளது. எனவே, ஈச்சம்பாடி அணையில் இருந்து நீரேற்று திட்டங்கள் மூலம் பாசன வசதி செய்ய வேண்டும், வரட்டாற்றின் குறுக்கே சில இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட நீர்ப்பாசனம் தொடர்பான கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, சேலத்தில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் வழியாக சென்னைக்கு  ஒரு சாலை செல்கிறது. மிகவும் மோசமாக உள்ள இந்த சாலையால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த சாலை மற்றும் தொகுதியில் உள்ள மேலும் சில பிரதான சாலைகளை மேம்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் வாக்காளர்களால் முன்வைக் கப்படுகிறது.

தற்போது போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று கூறியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, திமுக, அமமுக இடையே அரூர் தொகுதியில் மும்முனைப்போட்டி தீவிர மடைந்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close