[X] Close

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி; வேணுகோபால் Vs ஜெயக்குமார்- வெற்றிக்கனியை பறிப்பது யார்?


vs

  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 10:26 am
  • அ+ அ-

-இரா.நாகராஜன்

மெட்ராஸ் உருவாகுவதற்கு முன்பாக டச்சுக்காரர்களின் முக்கிய குடியிருப்பாக விளங்கிய பழவேற்காடு, பழமையான வீரராகவ பெருமாள் கோயில், சென்னையின் தாகம் தணிக்கும் முக்கிய ஏரிகளை கொண்டது திருவள்ளூர்(தனி) மக்களவை தொகுதி.

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், பூந்தமல்லி, ஆவடி, திருவள்ளூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கிய தொகுதி இது. 

முக்கிய பிரச்சினைகள்:

தொகுதியில் 800-க்கும் மேற்பட்ட ஏரிகள், வரத்துக்கால்வாய்கள் பல தூர்வாரப்படாத தாலும், கொசஸ்தலை, ஆரணி ஆறுகளின் குறுக்கே போதிய தடுப்பணைகள் அமைக் கப்படாததாலும், மழைநீர் வீணாக கடலில் சேருகிறது. 

கும்மிடிப்பூண்டி, மீஞ்சூரில் உள்ள பலநிறுவனங்களின் விதிமீறலால் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயிகளுக்கு  ஆண்டுதோறும் சுமார் 20 கோடி ரூபாயை நிலுவை தொகையாக வைத்து வருகிறது.

அதிக தொழிற்சாலைகள் இருந்தாலும், பல காரணங்களால் சில தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவது உள்ளிட்டவற்றால் தொகுதிவாசிகள் வேலையில்லா திண்டாட் டத்துக்கு உள்ளாகின்றனர்.  

திருவள்ளூரில் புறவழிச்சாலை, ஒருங் கிணைந்த பஸ்நிலையம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புகள் 5 ஆண்டுகளுக்கு மேலாக அறிவிப்பாக மட்டுமே இருக்கின்றன. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பட்டரைபெரும்புதூர், நாராயணபுரம் பகுதிகளில், கொசஸ்தலை, நகரி ஆறுகளின் குறுக்கே மேற்கொள்ளப்பட்டு வந்த பாலப் பணிகள், கடம்பத்தூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, புட்லூர்  ரயில்வே மேம்பாலப் பணிகள்ஆண்டுக்கணக்கில் கிடப்பில் இருக்கின்றன.

மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில்  அரசு மருத்துவக் கல்லூரி, கலைக் கல்லூரி, மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் ஆகியவை அமைக்கவேண்டும், அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்லவேண்டும், சென்னை-கும்மிடிப்பூண்டி ரயில்வே மார்க்கத்தில் நான்கு வழிப்பாதைகள் அமைக்கவேண்டும்  உள்ளிட்டவை கோரிக்கைகளாகவே உள்ளன.

தொகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவேண்டும், பழவேற்காடு முகத்துவாரப்பகுதி யில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர முகத்துவாரம், ஆவடி ரயில் நிலையத் தில் ரயில்வே சுரங்கப்பாதை, சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், செங்குன்றம் - சோத்துப்பாக்கம் சந்திப்பில் மேம்பாலம்  ஆகியவை அமைக்க வேண்டும் என பல கோரிக்கைகள் வரிசை கட்டி நிற்கின்றன.

திருவள்ளூர் மக்களவை தொகுதியில், மாம்பழ கூழ், வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், காய்கறி வகைகளை பதப்படுத்தும் மையம் ஆகிய வற்றை அமைக்கவேண்டும் என்பதும் தொகுதிவிவசாயிகளின் நீண்டகால விருப்பம்.

களநிலவரம்

இத்தொகுதியில், முந்தைய திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதியாக இருந்த போது, 1952, 1957, 1962 ஆகிய 3 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.  

தற்போதைய திருவள்ளூர் மக்களவைதொகுதியின் பெரும்பகுதிகளடங்கிய ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில், 1967,1971,

1980, 1996, 1999, 2004 ஆகிய 6 தேர்தல்களில் திமுகவும், 1984, 1989, 1991 ஆகிய 3 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியும், 1977,1998 ஆகிய 2 தேர்தல்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

மறுசீரமைப்புக்குப் பிறகான திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில், கடந்த 2009, 2014 ஆகிய 2 தேர்தல்களில் அதிமுக வெற்றிப் பெற்றுள்ளது. எனவே, இத்தொகுதியில் இதுவரை, 6 முறை காங்கிரஸ் கட்சியும், 6 முறை திமுகவும், 4 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. 

இதில், கடந்த 2 தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, வென்ற டாக்டர் வேணுகோபால்,   கடந்த மக்களவைத் தேர்தலில், 6,28,499 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து,  திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 3,05,069 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார். ஆகவே, கடந்த தேர்தலில் 3 லட்சத்து,23 ஆயிரத்து, 430 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வேணுகோபால், தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் மக்களவை தேர்தலில் வென்ற 2 தமிழக பெண்களில் ஒருவரான மரகதம் சந்திரசேகர், அத்தேர்தலில், திருவள்ளூர்(தனி) மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில், போட்டியிட்டு வென்றவர். அதுமட்டுமல்லாமல், 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில், தற்போதைய திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் பெரும்பகுதிகள் அடங்கிய, அப்போதைய ஸ்ரீபெரும்புதூர்(தனி) மக்களவைதொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர்.

தற்போது நடக்க உள்ள மக்களவைதேர்தலில், டாக்டர் வேணுகோபால் (அதிமுக),ஜெயக்குமார் (காங்கிரஸ்), பொன்.ராஜா(அமமுக), டாக்டர் லோகரங்கன் (மக்கள் நீதி மய்யம் கட்சி), வெற்றிச்செல்வி(நாம் தமிழர் கட்சி), அன்புச்செழியன் (பகுஜன்சமாஜ் கட்சி)உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என 20 பேர் களத்தில் உள்ளனர்.

இதில், அதிமுக சார்பில் 3-வது முறையாககளம் காணும் டாக்டர் வேணுகோபால் எளிமையானவர், பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் என, அனைவரிடமும் நட்புபாராட்டக்கூடியவர். எனவே, தொகுதி வாசிகளிடையே பெரிய அளவில் அதிருப்தி கிடையாது என்பது அவரது பலம். அமமுகவால் சற்று சரிந்துள்ள தங்களின் வாக்கு வங்கியை, கூட்டணிக்கட்சிகளான புரட்சி பாரதம், பாமக, தேமுதிக உள்ளிட்டவை ஈடுகட்டும் என்பது அதிமுகவின் எதிர்பார்ப்பு. 

காங்கிரஸ் வேட்பாளரான ஜெயக்குமார் தொகுதிக்கு புதியவர். இருப்பினும், அதிமுகவுக்கு சமமான வாக்கு வங்கியை வைத்துள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வாக்குகள், பண மதிப்பிழப்பு உள்ளிட்ட காரணங்களால் சாமானிய மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால், அதிமுக மீதான, சிறுபான்மையின மக்கள், விவசாயிகள், நடுத்தர, சாமானிய மக்களின் அதிருப்தி தங்களுக்கு சாதகமானச் சூழலை ஏற்படுத்தும் என்கிறார்கள் காங்கிரஸார்.

அமமுக வேட்பாளரான பொன்.ராஜா, கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில், பொன்னேரி(தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர், தொகுதியில் ஓரளவு அறிமுகமான முகம் என்பது அவரது பலம். அதிமுக மற்றும் பாமகவின் தீவிர விசுவாசிகளிடையே  உள்ள பாஜக - அதிமுக - பாமக கூட்டணி மீதான எதிர்ப்பு அலை தங்களுக்கு கணிசமான வாக்குகளை பெற்றுத்தரும் என்பது, அமமுகவின் கணிப்பு.

ஆகவே, இந்த மக்களவைத் தேர்தலில் போட்டி என்பது அதிமுக, காங்கிரஸ், அமமுக வேட்பாளர்களிடையேதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இந்த மும்முனைப் போட்டியில், வெற்றிக்கனியை 3-வது முறையாக பறிப்பாரா அதிமுக வேட்பாளர் டாக்டர் வேணுகோபால்?  தட்டிப்பறிப்பாரா காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் என்பது, தொகுதியில், உள்ள 19,46,242 வாக்காளர்களின் (9,61,864 ஆண்கள், 9,84,032 பெண்கள், 346 இதரர்) கைகளில் உள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close