[X] Close

நலிவடைந்து வரும் நெசவாளர்கள், விவசாயிகள்!: காஞ்சியின் பாரம்பரிய பட்டு நெசவை காக்கப் போவது யார்?- தேர்தலில் பதில் சொல்ல காத்திருக்கும் மக்கள்


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 10:18 am
  • அ+ அ-

-இரா.ஜெயபிரகாஷ்

கோயில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தின் பெயரில் அமைந்துள்ள இந்த மக்களவைத் தொகுதி விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த தொகுதி. தொழிற்சாலைகளின் பெருக்கம் காரணமாக வெளிமாநிலத் தொழிலாளர்கள் இங்கு அதிகம் குடியேறியுள்ளனர். இந்தத் தொகுதி காஞ்சிபுரம் (தனி), உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர் (தனி), செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது.

தொகுதி உருவான விவரம்:

கடந்த 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது செங்கல்பட்டு மக்களவைத் தொகுதியில் இருந்த சட்டப்பேரவைத் தொகுதிகள் பெரும்பாலானவை சேர்க்கப்பட்டு, காஞ்சிபுரம் மக்களவைத்தொகுதியாக பெயர் மாற்றம் பெற்று உருவானது.

இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டு 2 தேர்தல்கள் மட்டுமே நடந்துள்ளன.

2009-ல் நடைபெற்ற 15-வது மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பெ.விசுவநாதன் வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமாரவேல்வெற்றி பெற்றார். இந்தத் தொகுதி செங்கல்பட்டு மக்களவைத் தொகுதியாக இருக்கும்போது அதிமுக 5 முறையும், திமுக,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. பாமக 2 முறை வெற்றிபெற்றுள்ளது. சுயேச்சை ஒருமுறை வெற்றி பெற்றுள்ளார்.

முக்கிய பிரச்சினைகள்

சென்னையையொட்டி உள்ள நகரம்என்பதால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட தொழில் நகரங்களையும் ஒட்டியும்,மறைமலை நகர், மகேந்திரா சிட்டிஉள்ள தொழில் நகரங்களை உள்ளடக்கியும் அமைந்துள்ளது. இதனால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் குடியேறுகின்றனர்.

இப்பகுதி மக்களிடம் விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வருமானம் இல்லை. ஆறுகளில் நடைபெற்ற மணல் கொள்ளையால் விவசாயமும், போலி பட்டுச் சேலைகளால் நெசவாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2012-ம் ஆண்டு தமிழகஅரசு அறிவித்த ‘பட்டுப்பூங்கா’ இதுவரைசெயல்பாட்டுக்கு வரவே இல்லை. இதற்காக 75 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ரூ.83.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பக்கட்டப் பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. சர்வதேசசுற்றுலா நகரான மாமல்லபுரத்தில்வசதிமிக்க பேருந்து நிலையம்கூடஇல்லை. கடற்கரையோரக் கிராமங்களில்கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையும் அப்படியே உள்ளது.இத்தொகுதியில் திடீர் திடீரென்று

பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்படு கின்றன. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலை இழக்கின்றனர். இவர்களில் பலர் நடுத்தர வயதை கடந்த நிலையில் வேறு வேலைக்கும் செல்ல முடியாத

நிலையில் உள்ளனர். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படாத நிலையும் உள்ளது.

தற்போது இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் மரகதம் குமாரவேல், திமுக சார்பில் க.செல்வம், அமமுக சார்பில் முட்டுக்காடு முனுசாமி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் சிவரஞ்சனி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தே.சேகர் உட்பட 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினராக உள்ள மரகதம் குமாரவேல் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இவர் கடந்த முறை 4,99,395 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுரேஷ் 3,52,529 வாக்குகள் பெற்றார். 1 லட்சத்து 46 ஆயிரத்து 866 வாக்குகள் வித்தியாசத்தில் மரகதம் குமாரவேல் வெற்றிபெற்றார்.

அதிமுகவை பொறுத்தவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றத் தொகுதிகளில் ஒன்று காஞ்சிபுரம். மேலும் கடந்தமுறை தனி அணியில் இருந்த பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இந்தமுறை அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளன.

இது, அதிமுகவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும். நீண்ட கால கோரிக்கைகளாக இருந்த பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, ஈசூர் வள்ளிபுரம், வாயலூர் ஆகிய 2 இடங்களில் தடுப்பணைகளை தமிழக அரசு கட்டி வருவதும் கூடுதல் பலம்.

அதே நேரத்தில் அமமுக தனியாக நின்று பெருமளவு அதிமுகவின் வாக்குகளைப் பிரிக்கிறது. எட்டு வழிச் சாலை திட்டம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தேர்தலுக்குப் பிறகு இந்தத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. ஆறுகளில் மணல் கொள்ளை போன்றவற்றால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிப்படைந்துள்ளது. பட்டு நெசவாளர்கள் முன்னேற்றத்துக்காக முக்கிய நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்ற குறை நெசவாளர்கள் மத்தியில் உள்ளது.

திமுகவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நின்று வெற்றிவாய்ப்பை இழந்த வேட்பாளர் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் மீது மக்களுக்கு அனுதாபம் உள்ளது. மதிமுக, 2 கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தை போன்றவை இந்த அணியில் இருப்பது கூடுதல் பலம். ‘நீட்’ தேர்வுப் பிரச்சினை, ரூபாய் மதிப்பிழப்பு போன்ற மத்திய அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் திமுகவுக்கு ஆதரவான நிலையிலேயே உள்ளனர். காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதியில் 5 சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களே உள்ளனர். ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அமமுகவில் உள்ளார்.

தற்போதய நிலையில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக - திமுக இடையே கடும்போட்டி நிலவுகிறது. அமமுகவும் கணிசமான வாக்குகளை பெறும் வகையில் முன்னேறி வருகிறது. கடைசி நேர பிரச்சார  உத்திகளே யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் காரணிகளாக மாறலாம்.

இந்தத் தொகுதியில் 8,05,932 ஆண்கள், 8,37,551 பெண்கள் இதரர் 173 என மொத்தம் 16,43,656 வாக்காளர்கள் உள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close