[X] Close

நோட்டாவுக்கு வாக்களிக்க சொல்வது ஏன்?- நடிகர் ஆனந்தராஜ் புது விளக்கம்


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 08:39 am
  • அ+ அ-

-மகராசன் மோகன்

நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் ஆனந்தராஜ்  திடீர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து விரிவாக ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அவர் பேசியதாவது:

வாக்குப்பதிவுக்கு ஒருநாள் மட்டுமே இருக்கும் சூழலில், திடீரென  எல்லோரும் நோட்டாவுக்கு வாக்களியுங்கள் எனக் கூறியிருக்கிறீர்களே?

இந்த மாதிரி முடிவை வாக்குப்பதிவு நேரம் நெருங்கும் கடைசி நிமிடத்தில்தான் வெளியிட வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தை என்ற பெயரில் மனமாற்றம், மன உளைச்சல் உள்ளிட்ட விஷயங்களில் சிக்க முடியாது.

உங்களின் இந்த முடிவுக்கு ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும்தான் காரணமா?

நிச்சயமாக. என் கண்களை பார்த்து பேசும் வலிமை இல்லாதவர்களாக இருவரும் ஆனதுதான் இந்த முடிவுக்குக் காரணம்.  ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு குடும்ப அரசியலில் சிக்காமல் கட்சியை காப்பாற்ற வேண்டும் என முதலில் கூறியவன் நான். என்னை  இருவரும்சேர்ந்து கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுத்து பக்கத்திலேயே வைத்துக்கொள்ள வேண்டாமா. தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்யும் இயந்திரமல்ல நடிகன்.

இந்தத் தேர்தலில் வேட்பாளராக களம் இறக்கப்படவில்லை என்பதுதான் உங்கள் ஆதங்கம் மாதிரி தெரிகிறதே?

ஆமாம். 14 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவன். ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டவன். எனக்கு ஏன் சீட்கொடுக்கக் கூடாது. நான் போட்டியிட தகுதியில்லாதவனா.

அதிமுகவில் அழைப்பு  இல்லையென்றால் மற்ற இயக்கங்களை நாடியிருக்கலாமே?

கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு எந்த ஒரு சுகத்தையும் அனுபவிக்காத கோடானுகோடி தொண்டர்கள் அதிமுகவில் என்னை அண்ணனாக பார்க்கிறார்கள். அதோடு அம்மாவின் ஆன்மா எனக்குள் இருப்பதாகவே கருதுகிறேன். அதனால் அதிமுகவில் இருந்து வேறு எங்கும் செல்லும் மனநிலை எனக்கு இல்லை.

அப்படியென்றால் ஜெயலலிதாவின் ஆன்மாதான் நோட்டாவுக்கு வாக்களிக்கச் சொல்வதாக கூறுகிறீர்களா?

ஆமாம். என் கூடவே அம்மாவின் ஆன்மா இருப்பதாகவே கருதுகிறேன். தைலாபுரம் தோட்டத்த்தில் கூட்டணிபற்றி பேசிவிட்டு திரும்பியபோது ஒரு எம்.பி. அகால மரணம் அடைகிறார். இன்னொருவர்  நூலிழையில் உயிர் தப்பிக்கிறார். இதெல்லாம் இந்தக் கூட்டணி வேண்டாம் என்று அம்மாவின் ஆன்மா நினைப்பதாக நடக்கும் செயல்கள்தான். அப்படித்தான் என்னையும் நோட்டாவுக்கு வாக்களிக்க அவர் பரப்பச் சொல்வதாகவே கருதுகிறேன்.

14 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ளவர் என்று சொல்கிறீர்கள். திடீரென இப்போது பிறந்த சமுதாயத்தை குறிப்பிட்டும், வெளிப்படுத்தியும் வாக்கு சேகரிக்க காரணம் என்ன?

சமுதாயத் தேடல் எனக்கு தேவை இல்லை என்று நம்பியவன்தான். ஆனால்தற்போதைய அரசியல் களம் என்னைநான் ஒரு முதலியார் சமூகத்தை சார்ந்தவன் என்பதை வெளிப்படுத்த வைத்திருக்கிறது. சாதி ரீதியான அடையாளத்துக்காக நான் இதை பரப்பவில்லை.

அப்படியென்றால் தேர்தலுக்குப்பின்  டிடிவி தினகரன் பக்கம் செல்ல வாய்ப்பு இருக்குமோ?

அதிமுக என்ற ஒரு கட்சி உடைந்தால் அதற்கு முழு காரணம் டிடிவி தினகரன்தான். நாளை நடப்பதை நாளை பார்த்துக் கொள்வோம். அப்படியே அதிமுக உடைந்தாலும் எங்களைப்போன்ற படை எப்படியும் அதிமுகவை வழி நடத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close