[X] Close

விழுப்புரத்தில் ‘மிஸ் கூவாகம்’ அழகிப்போட்டி


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 08:31 am
  • அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ளகூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரைதிருவிழா கடந்த 2-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று (ஏப்.16) நடக்கிறது. இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு கோயில்பூசாரி கையினால் தாலி கட்டிக் கொள்வார்கள். தொடர்ந்து, நாளை (ஏப்.17) தேரோட்டம் நடைபெறுகிறது.

இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி வடமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்துக்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையில், விழுப்புரத்தில் நேற்று நடன நிகழ்ச்சிகள் மற்றும் “மிஸ் கூவாகம்” அழகிப் போட்டி நடைபெற்றது.

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியை விழுப்புரம் டிஎஸ்பி திருமால், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட திருநங்கைகள் நலச்சங்க தலைவர் ராதாம்மாள் வரவேற்றார். தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பைச் சேர்ந்த 72 தலைவிகள் முன்னிலை வகித்தனர்.

முதற்கட்டமாக திருநங்கைகளுக்கான நடனப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான திருநங்கைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பாடலுக்கேற்ப நடனமாடினர்.

இதனைத் தொடர்ந்து “மிஸ் கூவாகம்” அழகிப்போட்டி நடந்தது. இதில் சென்னை,சேலம், ஈரோடு, மதுரை, கோவை, திருச்சி,விழுப்புரம், நாமக்கல், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 36 திருநங்கைகள் கலந்து கொண்டு விதவிதமான, வண்ண வண்ண உடைகளில் மேடையில் தோன்றினர்.

இப்போட்டியின் முதல் சுற்றில் நடை,உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 15 பேர் 2-ம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் 2-ம் சுற்றுக்கான அழகிப் போட்டி, விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் தொடங்கியது. போட்டியின் முடிவில் மிஸ் கூவாகமாக தருமபுரி நபிசா முதலிடமும், கோவை மடோனா இரண்டாமிடமும், பவானியைச் சேர்ந்த ருத்ரா மூன்றாமிடமும் பிடித்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close