[X] Close

ஓட்டுரிமையை ஆயுதமாக பயன்படுத்துங்கள்: திருச்சி பிரச்சாரத்தில் கமல்ஹாசன் வேண்டுகோள்


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 08:28 am
  • அ+ அ-

இத்தேர்தலில் ஓட்டுரிமையை ஆயுதமாகப் பயன்படுத்துமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தினார்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆனந்தராஜாவை ஆதரித்து, திருச்சி மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், மணப்பாறை ஆகிய இடங்களில் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை. அரசாங்கம், சாராய வியாபாரத்தை கையில் எடுத்துக்கொண்டு, கல்வியை தனியாரிடம் கொடுத்ததால் வந்த நிலைதான் இது. அரசுப் பள்ளிகளை மீட்டெடுத்து உலகத்தரத்துக்கு உயர்த்துவோம்.

வீடுகள்தோறும் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். விலைக்கு விற்கக்கூடாது.

அண்ணா சொன்னபடி, வடநாட்டவர்கள் தொடர்ந்து தெற்கை தேய்த்துக் கொண்டே இருக்கின்றனர். நாமும் அதை அனுமதித்துக் கொண்டே இருக்கிறோம். அதற்காக, தனியாக ஒதுங்கிச் செல்ல வேண்டியதில்லை. கூடவே இருந்து, அவர்களிடம் நமது குரலை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை செய்ய முடியும்.

மணல் கொள்ளை கண்மூடித்தனமாக நடைபெறுகிறது. கட்டுவதாகக் கூறிய பாலங்களை கட்டுவதில்லை. இவர்களை வெகுவிரைவில் அகற்ற வேண்டும். அரசு ஊழியர்களும், காவலர்களும் எந்த ஆட்சி வர வேண்டும் என விரும்புகிறார்கள் என எனக்குத் தெரியும். காவல் துறை ஏவல்துறையாக மாற்றப்பட்டிருப்பதைக் கண்டிக்க முடியாமல், காவலர்கள் மனதுக்குள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை மய்யம் பாதுகாக்கும். இத்தேர்தலில் ஓட்டுரிமையை ஆயுதமாகப் பயன்படுத்துங்கள். நல்ல கட்சி, நேர்மையான கட்சி எது எனத் தேடிப் பாருங்கள். வாக்குகளை விற்றுவிடாதீர்கள். சாதி, மத பேதங்களை மறந்து வாக்களியுங்கள். அனைவரும் ஒன்றாக நின்றால், தமிழ்நாடு இந்தியாவின் தலைவாசலாக மாறும் நிலை வரும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close