[X] Close

சொத்து தகராறில் முன்னாள் அதிமுக எம்பி மனைவி கொலை: லண்டனில் இருந்து வந்த மகன் வெறிச்செயல்


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 08:22 am
  • அ+ அ-

சொத்து தகராறில் முன்னாள் அதிமுக எம்பி.யின் மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள அவரது மகனை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை பெசன்ட் நகர், 6-வது அவென்யூவில் வசித்து வந்தவர் குழந்தைவேலு. முன்னாள் அதிமுக (திருச்செங்கோடு) எம்பி.யான இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகி விட்டார். இவரது மனைவி ரத்தினம் (63). இவர்களது மகன் பிரவீன் (35). இவர் லண்டனில் இருந்தார். தாய் - மகனுக்கு இடையே நீண்ட நாட்களாக சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் பிரவீன் சென்னை வந்துள்ளார். தனது தாய் ரத்தினத்திடம் சொத்து தொடர்பாக தகராறு செய்தததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரத்தினம், திருப்பூரில் உள்ள தனது மகள் சுதாவுக்கு நேற்று முன்தினம் இரவு போன் செய்து பிரவீன் தன்னிடம் தகராறில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளார். பின்னர் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்துக்கு பிறகு சுதா போனில் தொடர்பு கொண்டபோது ரத்தினத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த சுதா இதுகுறித்து சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து ரத்தினத்தின் வீட்டை பார்த்தபோது வீட்டின் கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது.

சந்தேகமடைந்த அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்தினம் கத்தி குத்து காயத்துடன் சடலமாகக் கிடந்தார். மேலும் அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. வாயில் பேப்பர் வைத்து திணிக்கப்பட்டிருந்தது.

மேலும் எலக்ட்ரிக் ஒயரால் கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த போலீஸார் ரத்தினத்தின் சடலத்தை மீட்டு அதை பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாஸ்திரி நகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். "சொத்து தொடர்பாக கொலைநடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரவீனை கைது செய்தால் கொலைக்கான முழு காரணமும் தெரியவரும். எனவே, தலைமறைவாக உள்ள பிரவீனை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளோம்" என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பிரவீன், தனது தாயார் வீட்டிலிருந்து நகை, பணத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், அவர் தற்போது தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளார். இதனால், அவரை பிடிப்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க விமான நிலைய போலீஸாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close