[X] Close

வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் மின்னணு இயந்திரங்கள் நாளை அனுப்பப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 08:13 am
  • அ+ அ-

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நாளை பிற்பகல் முதல் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் நிலை கண்காணிப்புக் குழு, தேர்தல் பறக்கும்படையினர் மேற்கொண்ட சோதனைகளில், நேற்று (ஏப்.14) ஒருநாளில் மட்டும் ரூ.1 கோடியே 63 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக ரூ.132 கோடியே 91 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.113 கோடியைவிட அதிகமாகும். இதுதவிர, வருமானவரித் துறை, பறக்கும் படையினர் இணைந்து நடத்திய சோதனைகளில் ரூ.55 கோடியே 2 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். இதில், வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்த தொகை மட்டும் ரூ.42 கோடியே 37 லட்சமாகும்.

பறிமுதல் செய்யப்பட்ட தொகையில், ஆவணங்கள் அடிப்படையில் ரூ.65 கோடியே 1 லட்சம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.36 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள், எரிசாராயம், ரூ.37 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.8 கோடியே 15 லட்சம் மதிப்பிலான சேலை, வேட்டி, மடிக்கணினி, குக்கர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, ரூ.286 கோடி மதிப்புள்ள 998 கிலோ தங்கம் மற்றும் 642 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஏப்.17-ம் தேதி (நாளை) பிற்பகல் முதல் மண்டல குழுக்கள் பாதுகாப்புடன், மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள்சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் அடையாள அட்டை உட்பட 12 ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம். வாக்காளரின் பெயர், சம்பந்தப்பட்ட பகுதி வாக்காளர் பட்டியலில் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் எங்கிருந்தாலும் வாக்களிக்க முடியும் என சிலர் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். அவ்வாறு யாரும் வாக்களிக்க இயலாது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே தபால் வாக்கு வழங்கப்படுகிறது. இந்தமுறை 924 வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களும் இங்கு வந்துதான் வாக்களிக்க முடியும். ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம் வாக்காளர்களுக்கு வாக்களிக்க வசதி செய்யும்படி கோரப்பட்டது. அவ்வாறு தனிப்பட்ட எந்த வசதியும் செய்து தரப்படவில்லை.

தேர்தல் பணியில் ஈடுபடும் 4 லட்சத்து 22 ஆயிரத்து 239 பேரில், 2 லட்சத்து 3 ஆயிரத்து 413 பேருக்கு தபால் வாக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் 1 லட்சத்து ஆயிரத்து 473 பேர் பூர்த்தி செய்து வாக்களித்துள்ளனர். சொந்த தொகுதியில் வேறு இடத்தில் தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு 97,467 இடிசி படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் நீக்குவதற்காக ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 2 பேர் என்ற அடிப்படையில் ‘பெல்’ நிறுவனத்தைச் சேர்ந்த 489 பொறியாளர்கள் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மேல் எந்த பிரச்சாரமும் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close