[X] Close

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திமுக மீது 1,410; அதிமுக மீது 1,119 வழக்குகள்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்


1-410-1-119

  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 08:10 am
  • அ+ அ-

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் அதிமுக மீது 1,119, திமுக மீது 1,410 வழக்குகள் உட்பட மொத்தம் 4,466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, இந்திய தண்டனை சட்டம் 171-வது பிரிவு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் இதுவரை 4,466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக திமுக மீது 1,410 வழக்குகளும், அதிமுக மீது 1,119 வழக்குகளும் பதிவாகியுள்ளன. மற்ற கட்சிகள், சுயேச்சைகள் மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்திய தண்டனை சட்டம் 171-வது பிரிவின் கீழ், அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்தல், ஓட்டுக்கு பண விநியோகம் உள்ளிட்ட பிரிவுகளின் அடிப்படையில் 261 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தப் பிரிவுகளில் பாஜக-15, காங்கிரஸ்-10, பகுஜன் சமாஜ்- 3, அதிமுக- 68, திமுக- 46, தேமுதிக- 4, அமமுக- 55, பாமக- 5, மதிமுக -3, விசிக- 4, மக்கள் நீதி மய்யம்-2, முஸ்லிம் லீக்-1, நாம் தமிழர் கட்சி - 8 வழக்குகளும் இதர கட்சிகள், சுயேச்சைகள் மீது 37 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

அதேபோல், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அதிமுக மீது 94, திமுக மீது 112 உட்பட 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதியில் பண விநியோகம், விதி மீறல் உள்ளிட்ட புகார்களை வீடியோ, புகைப்படமாக அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், இதுவரை 2,387 புகார்கள் வந்துள்ளன. இதில், 1,076 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பெரும்பாலான புகார்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து புகார்தாரருக்கு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 45 புகார்கள் மீதான நடவடிக்கை நிலுவையில் உள்ளது. மீதமுள்ள புகார்கள் கைவிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close