[X] Close

நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்: முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு ஆட்சியர் அறிவுரை


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 07:53 am
  • அ+ அ-

வரும் மக்களவைத் தேர்தலில் நாம் ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்கும் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும்; அதனால் மாணவர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா மாணவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

‘இந்து தமிழ்' நாளிதழும், தேர்தல் ஆணையமும் இணைந்து நடத்திய முதல் தலைமுறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காஞ்சிபுரம், ஏனாத்தூர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இயக்குநர் வெங்கட்ராமன் வரவேற்க, நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா பேசியதாவது:

இந்தியத் தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலை, ‘இந்தியாவின் மக்களவைத் தேர்தல் திருவிழா 2019' என்று கூறியுள்ளது. இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அதன்படி மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

வாக்களிப்பின் மூலம் இந்திய ஜனநாயகத்தில் நாமும் பங்கேற்க வேண்டும். நாம் ஒருவர் வாக்களிக்காவிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது என்ற எண்ணம் சிலரிடம் உள்ளது. நாம் ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்கின் மூலம்தான் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும். நம் ஒருவர் வாக்குதானே என்று விட்டுவிட்டால் மன்னன் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றச் சொன்னபோது எல்லோரும் தண்ணீரை ஊற்றிய கதைபோல் ஆகிவிடும்.

70-74% வாக்குப்பதிவு

இந்தியா குடியரசு நாடாகி தேர்தல் நடைபெறும்போது அப்போது வாக்களிக்கும் வயது 21ஆக இருந்தது. அதன் பிறகே வாக்களிக்கும் வயது 18ஆக குறைக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் சராசரியாக 65-ல் இருந்து 67 சதவீத வாக்குப்பதிவுதான் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 70 முதல் 74 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4,122 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கணக்கிடப்பட்டுள்ளன. எனவே நாம் அனைவரும் வாக்களிப்பதை கடமையாக கொள்ள வேண்டும். நாம் வாக்களிப்பதன் மூலம் தேர்வு செய்யும் பிரதிநிதிகளின் வழியாகத்தான் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எனவே ஜனநாயகத்தில் நமக்கும் பங்குண்டு என்ற எண்ணம் வர வேண்டும்.

இப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். தற்போது தொடர் விடுமுறை வருகிறது. இதனால் நீங்கள் வாக்களிக்காமல் சுற்றுலா செல்லக்கூடாது. அனைவரும் தேர்தலன்று தங்கள் பெயர் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும். இந்த சமுதாயத்தை முன்னேற்ற மாணவர்களால்தான் முடியும். நீங்கள் சமுதாயத்தில் ஒரு முக்கிய அங்கம் என்பதால் நாங்கள் உங்களிடம் இந்தக் கோரிக்கையை நம்பிக்கையுடன் வைக்கிறோம். அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள். உங்கள் உறவினர்களையும், சுற்றியுள்ளவர்களையும் வாக்களிக்கக் கூறி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து ‘இந்து தமிழ்' நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் பேசியதாவது:உலகத்தில் சுதந்திரம் அடைந்த நாடுகள் அனைத்தும் மக்களாட்சியை தேர்ந்தெடுத்த நாடுகளாக ஆகவில்லை. நம்முடைய இந்த மக்களாட்சி முறையில் சில குறைகள் இருக்கலாம். ஆனால் மக்களாட்சியில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமான உரிமை உள்ளது. உயரிய விழுமியங்கள் கொண்ட மக்களாட்சியின்கீழ் நாம் வாழ்கிறோம் என்பது முக்கியமானது. மாணவர்கள் அரசியலை குறை கூறாமல் அதில் பங்கெடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள் சிலரிடம் தவறு உள்ளது என்பதற்காக அரசுப் பணிக்கே செல்ல மாட்டேன் என்று நம்மால் கூற முடியுமா? அரசியலில் இருப்பவர்களில் சிலர் தவறு செய்கிறார்கள் என்பதற்காக, அதையே காரணமாக காட்டி வெறுக்காமல் ஜனநாயகத்திலும், வாக்கெடுப்பிலும் நாம் பங்கெடுக்க வேண்டும். அரசியல் சூழல் சிறப்பானதாக மாற உங்களைப் போன்ற வாக்காளர்கள் பங்கேற்பு அவசியம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் சீனுவாசு, மேலாண்மைத் துறை டீன் ரமணகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின்போது, ‘‘மாணவர்கள் அனைவரும் வாக்களிப்போம் என்றும், பணம் வாங்காமல் வாக்களிப்போம்’’ என்றும் உறுதிமொழி ஏற்றனர். ‘இந்து தமிழ்' முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் நன்றி கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close