[X] Close

மத்திய சென்னையில் மகுடம் சூடுவது யார்?- கட்சிகளின் தீவிர பிரச்சாரத்தால் எகிறும் எதிர்பார்ப்பு


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 07:46 am
  • அ+ அ-

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, பாமக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் தீவிரப் பிரச்சாரத்தால் அத் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக - தயாநிதிமாறன்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனான தயாநிதி மாறன், மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் ஏற்கெனவே 2 முறை வென்றவர், மத்திய சென்னை தொகுதியில் உள்ள எழும்பூர் (தனி), வில்லிவாக்கம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளும் திமுக வசம் இருப்பது அவருக்கு சாதகமான அம்சங்களாகப் பார்க்கப்படுகிறது.

‘தயாநிதி மாறனை எளிதில் யாரும் அணுக முடியாது’ என்பது எதிரணியினரின் பிரச்சாரத்தில் முக்கிய குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது. எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற அதீத நம்பிக்கையில் தயாநிதி மாறன் இருப்பதை திமுகவினரே பலவீனமாகப் பார்க்கின்றனர்.

பாமக - எஸ்.ஆர். சாம் பால்

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் எஸ்.ஆர்.சாம் பால். கூட்டணிக் கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக ஆகியவற்றின் வாக்கு வங்கியையே நம்பி உள்ளார். கிறிஸ்தவராக இருந்தாலும் பிற மதத்தினருடன் அவர் நல்லிணக்கத்துடன் இருப்பது கூடுதல் பலம் என்கின்றனர் பாமகவினர். மத்திய சென்னை தொகுதியில் வட மாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் என்.எஸ்.சி. போஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, சாம் பாலை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அவருக்கு வட மாநிலத்தவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இருப்பினும், தொகுதி மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான வேட்பாளராக இல்லாமல் இருப்பதும், அவர் சார்ந்திருக்கும் பாமகவுக்கு இத்தொகுதியில் வலுவான அடித்தளம் இல்லாததும் அவருக்கு சற்று பலவீனமாகக் கூறப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் - கமீலா நாசர்

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமீலா நாசர், நடிகர் நாசரின் மனைவி. தொகுதி மக்களுக்கு அதிக அறிமுகம் இல்லாதவராகவே இருக்கிறார். ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருதல், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஆகியன அவரது பிரச்சார முழக்கமாக இருக்கிறது. பிரச்சாரத்தின்போது, மத்திய, மாநில அரசியல் பற்றி விரிவாகப் பேசுவதில்லை என்பதால் இவரது பிரச்சாரம் பெரிய அளவில் வாக்காளரிடம் போய்ச் சேரவில்லை என்பது பலவீனமாகத் தெரிகிறது.

மத்திய சென்னை தொகுதியில் உள்ள முஸ்லீம் வாக்குகள் கணிசமாகக் கிடைக்கும் என்று கமீலா நாசர் நம்புகிறார். இருப்பினும், பிரச்சாரக் கூட்டத்துக்கு முன்அனுமதி வாங்குவது, பிரச்சார வியூகம் ஆகியவற்றில் மக்கள் நீதி மய்யம் தடுமாறத்தான் செய்கிறது.

எஸ்டிபிஐ - தெகலான் பாகவி

அமமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்எல்ஏ.வுமான டிடிவி.தினகரன் ஆதரவுடன் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் தெகலான் பாகவி, தொகுதியில் நன்கு அறிமுகமானவர். மேலும் அமமுக ஆதரவு அவருக்கு பலமாகப் பார்க்கப்படுகிறது. ‘தொகுதியில் உள்ள சுமார் 2 லட்சம் முஸ்லீம் வாக்குகளைப் பெறுவதுடன், பிற சமூகத்தினர் வாக்குகளும் கணிசமாகக் கிடைக்கும் என்பதால் தனக்கும், தயாநிதி மாறனுக்கும்தான் போட்டி’ என்கிறார் தெகலான் பாகவி. திமுக, பாமக வேட்பாளர்களுக்கு இணையாக பிரச்சாரக் களத்தில் தீவிரமாக ஈடுபட்டாலும், புதிய சின்னமான பரிசுப் பெட்டகத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் சற்று சிரமம் இருப்பதாகவே தெரிகிறது.

நாம் தமிழர் கட்சி - கார்த்திகேயன்

இத்தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் கார்த்திகேயனும் தீவிர பிரச்சாரத்தில் சளைக்காமல் ஈடுபட்டுள்ளார். தொண்டர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் முழக்கம் சற்று ஓங்கியே இருக்கிறது. இது, தொகுதி மக்களை ஈர்த்துள்ளதோடு இளைஞர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்

மத்திய சென்னையில், உயர் நீதிமன்றம், தலைமைச் செயலகம், ரிசர்வ் வங்கி, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், மெரினா கடற்கரை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு பல்நோக்கு மருத்துவமனை, எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், நேரு விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட முக்கியமான இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால் போக்குவரத்து வசதிகள் இல்லாதது மக்களின் பெருங்குறை.

மதுரவாயல் – துறைமுகம் உயர்மட்ட பறக்கும் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் இருந்தும் இத்தொகுதியில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினையாக நீடிக்கிறது.

மற்றொரு முக்கியப் பிரச்சினையான குடிநீர் தட்டுப்பாடு, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது போன்ற பிரச்சினைகளுக்கு நீண்டகாலமாகத் தீர்வு காணப்படவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இத்தொகுதியின் திமுக வேட்பாளரான தயாநிதி மாறனின் தந்தை முரசொலி மாறன் 3 முறை வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்து, மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். தயாநிதி மாறன் 2004, 2009-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வென்று, மத்திய அமைச்சராகவும் ஆனார். 2014 தேர்தலில் அதிமுக முதல்முறையாக வெற்றிபெற்றது. அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் 3 லட்சத்து 33 ஆயிரத்து 296 வாக்குகள் பெற்று வென்றார். தயாநிதி மாறன் 2 லட்சத்து 87 ஆயிரத்து 455 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

இத்தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சியான பாமக வேட்பாளர் எஸ்.ஆர்.சாம் பால், எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் தெகலான் பாகவி ஆகியோர் தயாநிதி மாறனுக்கு கடும் போட்டி கொடுக்கும் நிலையில், மத்திய சென்னையில் மகுடம் சூடுவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close