[X] Close

கட்சி அரசியலை தாண்டி படித்தவர்கள், நடுத்தர மக்களிடம் மோடிக்கு பெரும் ஆதரவு உள்ளது- பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி திட்டவட்டம்


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 07:43 am
  • அ+ அ-

-எம்.சரவணன்

கட்சி அரசியலைத் தாண்டி படித்தவர்கள், நடுத்தர மக்களிடம் மோடிக்கு பெரும் ஆதரவு இருப்பதாக துக்ளக் வார இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ செய்தியாளரின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

தேர்தல் திருவிழா தொடங்கி விட்டது. தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை நிலையான ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள கட்சி அல்லது கூட்டணிக்குதான் கணிசமான வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். 1977-ல் காங்கிரஸுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஜனதா கட்சியாக இணைந்து மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தின. இதனால் அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தது. 1989-ல் காங்கிரஸுக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகவில்லை என்றாலும் பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வி.பி.சிங் பிரதமராக வருவார் என பிரச்சாரம் செய்தன. அதனால் பாஜக ஜனதாதளம் மார்க்சிஸ்ட் இணைந்து ஆட்சியமைத்தன. 1998, 1999-ல் நிலையான ஆட்சியை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதால் பாஜக ஆட்சி அமைத்தது.

2004, 2009-ல் காங்கிரஸ் வலுவான கூட்டணியை அமைத்து மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியது. 2014-ல் மோடியை பிரதமராக முன்னிறுத்தி பாஜக பெரும் வெற்றிபெற்றது. 10 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி அரசில் நடந்த ஊழல்களும் மோடியின் வெற்றிக்கு காரணம்.

இந்தத் தேர்தலில் மோடிக்கு எதிராக ஒரு வலுவான அணியை காங்கிரஸால் உருவாக்க முடியவில்லை. மோடி அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. எனவே, தேர்தல் களம் மோடிக்கே சாதகமாக உள்ளது. மோடிக்கு மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பளிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

மோடி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்கிறீர்கள். ஆனால், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வருகிறதே?

காங்கிரஸ் என்றாலே ஊழல் கட்சி என்ற பெயர் வந்துவிட்டது. காங்கிரஸ் நாணயமான கட்சி என்று யாராலும் கூற முடியாது. அதனால் பாஜக மீதும் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி மக்களிடம் கெட்டப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என காங்கிரஸ் திட்டமிட்டு பிரச்சாரம் செய்கிறது.

ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயம் செய்ததைவிட அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்துவிட்டது என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு. ஆனால், இது உண்மையல்ல என்பதை உச்ச நீதிமன்றமும், மத்திய கணக்குத் தணிக்கை துறை தலைவரின் (சிஏஜி) அறிக்கையும் தெளிவுபடுத்திவிட்டது.

ரஃபேல் ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் பாரபட்சம் காட்டப்படவில்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ரஃபேல் ஒப்பந்தம் இந்தியா பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே செய்யப்பட்டது. இதில் ஊழல் என்பது துளியும் இல்லை. அதனால்தான் ரஃபேல் விவகாரம் மக்களிடம் எடுபடவில்லை. இனியும் எடுபடாது.

சமூக ஊடகங்களில் திமுக இந்து விரோதக் கட்சி என்ற பிரச்சாரம் நடக்கிறது. இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்களா?

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இந்து மதம், கலாசாரத்தின் நம்பிக்கை இல்லை. ஆனாலும் அவர்கள் இந்து மதத்தை தாக்கியும், மற்ற மதங்களை உயர்த்தியும் பேசுவதில்லை.

தேர்தல் வரும் என்ற நினைவில்லாமல் கடந்த காலங்களில் பேசியதெல்லாம் முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் மூலம் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைகிறது. இதுபற்றியெல்லாம் மக்கள் விவாதிக்கிறார்கள். பகவான் கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியது மக்களிடம் பெரும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்து மதம், கடவுள்களுக்கு எதிரான பேச்சுகள் தேர்தலில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன். அதனால்தான், “திமுக இந்து விரோதக் கட்சி இல்லை. என் மனைவி கோயிலுக்குச் செல்வதை தடுப்பதில்லை” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசுவதாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகிறார்களே?

இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படியொரு எதிர்ப்பலை இருந்தால் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளிலும் கடும் எதிர்ப்பு இருந்திருக்க வேண்டும். ஆனால், பாஜக வேட்பாளர்களுக்கு பெரும் வரவேற்புதான் இருக்கிறது. தமிழ்த் தேசியம் பேசுபவர்கள், இந்திய தேசியத்தை எதிர்ப்பவர்கள் மோடியை எதிர்க்கிறார்கள். அதனை எதிர்த்து குரல் கொடுக்க தமிழகத்தில் பாஜகவுக்கு வலு இல்லை. அதனால் ஒருபக்க குரல் மட்டுமே ஒலிக்கிறது. ஆனால் மக்களின் மனம் யாருக்கும் தெரியாது. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு படித்தவர்கள், நடுத்தர மக்களிடம் மோடிக்கு பெரும் ஆதரவு உள்ளது. மோடியை ஆதரிப்பவர்கள் யாரும் தெருவுக்கு வந்து மோடிக்கு ஆதரவாக கோஷம் போடுவதில்லை. அதனால் உண்மை தெரிவதில்லை.

ஜெயலலிதாவே பாஜகவுக்கு 1998-ல் 6, 2004-ல் 7 தொகுதிகளை ஒதுக்கினார். ஆனால், இப்போது பாஜகவுக்கு 5 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

திமுக கூட்டணி 2 ஆண்டுகளுக்கு முன்பே உருவாகிவிட்டது. ஆனால், அதிமுகவும், பாஜகவும் கடைசி நேரத்தில்தான் கூட்டணி அமைத்தன. அதிமுகவின் ஊழல்களை பாஜகவால் ஏற்க முடியவில்லை. அதனால் தேர்தலுக்கு முன்பே இணைந்து செயல்பட முடியவில்லை. இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் சேர வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கும், பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கும் ஏற்பட்டது. அதனால்தான் பாஜகவுக்கான தொகுதிகள் குறைந்துவிட்டன. தொடக்கத்திலேயே அதிமுக பாஜக இணைந்து செயல்பட்டிருந்தால் அதிக தொகுதிகள் கிடைத்திருக்கலாம்.

பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் வரவேற்றுள்ளார். இதனை பாஜகவுக்கு ஆதரவான குரலாக எடுத்துக் கொள்ள முடியுமா?

ரஜினிகாந்த் எனது நண்பர். தேசியம், தெய்வீகம் மீது நம்பிக்கை கொண்டவர். தனிக் கட்சி தொடங்கி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருப்பவர். எனவே, அவரது கருத்துக்கு ஒரு முக்கியத்துவம் இருப்பதை மறுக்க முடியாது. ரஜினி எப்போதுமே மோடிக்கு எதிராக கருத்து சொன்னதில்லை. மோடி மீது மதிப்பு கொண்டவர் ரஜினி. அவர் சொல்வதைக் கேட்டு வாக்களிக்க காத்திருக்கும் ரசிகர்கள், ஆதரவாளர்களுக்கு அவர் சொன்னதன் பொருள் புரியும்.

கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் இல்லாத நிலையிலும் திமுக, அதிமுகவுக்கு மாற்று உருவாக முடியவில்லையே?

திமுகவுக்கு மாற்று அதிமுக, அதிமுகவுக்கு மாற்று திமுக என்ற நிலை மேலும் சில காலத்துக்கு நீடிக்கும் என நினைக்கிறேன். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு நிலைமை மாறலாம்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 5 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள் ளார்கள். இது அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தருமா?

எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் அல்லது பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் இதுபோன்ற சாத்தியமற்ற வாக்குறுதியை அளித்துள்ளது. 5 கோடி குடும்பங்களை அடையாளம் கண்டு இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமல்ல. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை சாத்தியமற்றது என்று கூறிய சில பொருளாதர நிபுணர்கள் ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் கொடுக்கும் திட்டத்தை ஆதரிப்பது வேடிக்கையாக உள்ளது.

அத்வானி, ஜோஷி போன்ற மூத்த தலைவர்களை ஓரம்கட்டி மோடி சர்வாதிகாரியாக செயல் படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே?

90 வயதில் ஒருவரை தேர்தலில் நிறுத்தினால் அந்தக் கட்சி வளராது. ஒரு கட்சி வளர வேண்டு மானால் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க வேண்டும். பாஜக ஆளும் மாநிலங் களின் முதல்வர்கள் 50 வயதுக்கும் குறைவான வர்கள். பிரதமர் மோடிக்கு 69 வயதாகி விட்டது. அடுத்த தேர்தலில் அவரே போட்டியிட முடியுமா என்பது தெரியவில்லை. அத்வானியும், முரளிமனோகர் ஜோஷியும் போட்டியிட விரும்பவில்லை எனக் கூறிவிட்டனர். அவர்கள் போட்டியிட விரும்பியிருந்தால் அதுதான் தவறு.

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்? துக்ளக் கருத்து கணிப்பு கூட திமுகவுக்கு சாதகமாக உள்ளதே?

ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்த பிறகு திமுகவின் போராட்ட குணம் மீது எனக்கு நம்பிக்கை போய்விட்டது. கூட்டணி அமைப்பதில் திமுக முந்திக் கொண்டதாலும், அதிமுகவின் செயல் பாடுகளாலும் ஆரம்பத்தில் தேர்தல் களம் திமுக கூட்டணிக்கே சாதகமாக இருந்தது. ஆனால், அதிமுகவும் வலுவான கூட்டணி அமைத்ததால் இப்போது போட்டி கடுமையாகியுள்ளது. எனவே, இரு கூட்டணிக்கும் சமமான இடங்கள் என நினைக்கிறேன். தொடக்கத்தில் இருந்த நிலையே துக்ளக் கருத்துக் கணிப்பில் வெளிவந்தது. இப் போது நிலைமை மாறியுள்ளது என்பது எனது கணிப்பு. இவ்வாறு எஸ்.குருமூர்த்தி கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close