[X] Close

மேகேதாட்டு அணை விவகாரம்; ராகுல் காந்தியின் கருத்து குறித்து ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்: மொடக்குறிச்சியில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 07:35 am
  • அ+ அ-

கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்யும்போது, காவிரியில் மேகேதாட்டு அணை கட்டப்படும் என்று ராகுல்காந்தி கூறியிருப்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பேசினார்.

ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி.மணி மாறனை ஆதரித்து மொடக் குறிச்சியை அடுத்த கஸ்பா பேட்டையில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

மத்தியில் திறமையான பிரதமர் தலைமையில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி வெற்றி பெற்றால், தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களுக்கு நிதி பெற முடியும். ஆனால், திமுக கொள்கையில்லாத சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது.

தீவிரவாதம், பயங்கரவாதத்தை ஒழித்துக் காட்டியவர் பிரதமர் மோடி. அப்படிப்பட்ட தலைமை இருந்தால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும்.

ஸ்டாலினால் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடகாவில் பிரச்சாரம் செய்யும்போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், காவிரியில் மேகேதாட்டு அணை கட்டப்படும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்டினால், 63 டிஎம்சி நீரைத் தேக்கி விடுவார்கள். அப்படி செய்தால், தமிழகம் பாலைவனமாகி விடும். காவிரி விஷயத்தில் நமக்கு கிடைத்த நீதியை தடுத்து அநீதி இழைக்கப் பார்க்கின்றனர். ராகுலின் பேச்சுக்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்?

அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை நிறை வேற்றி, வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு காவிரியில் இருந்து நீர் எடுத்துச் சென்று நிரப்பப்படும். கீழ்பவானி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற பாண்டியாறு- புன்னம்புழா திட்டம் நிறைவேற்றப்படும்.

திமுகவைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்த வைகோ இன்று அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார். அரசியல் கட்சித் தலைவருக்கான தகுதி அவருக்கு இல்லை. அவர் கட்சி சின்னத்தில் ஈரோடு வேட்பாளரை போட்டியிடச் செய்யாமல், திமுக சின்னத்தில் போட்டியிட வைத்துள்ளார். தேர்தல் விதிமுறையின்படி ஒரு கட்சியின் உறுப்பினராக இருந்தால்தான், அந்த கட்சியின் சின்னத்தை பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடமுடியும். பலரும் உயிர்த்தியாகம் செய்து உருவான மதிமுகவை, திமுகவிடம் வைகோ அடகு வைத்து விட்டார்.

தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கின்றனர். இந்த ஆட்சியைக் கலைத்து விடலாம், கட்சியை உடைத்து விடலாம் என ஸ்டாலின் நினைத்தார். ஆனால், அவரது எண்ணம் நிறைவேற வில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் கனவில் கூட முதல்வராக முடியாது. நல்ல உள்ளம் இருந்தால்தான் மக்கள் ஆதரிப்பார்கள் என்றார்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, சூளை பகுதிகளில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close