[X] Close

சென்னையின் 3 தொகுதிகளில் பிரச்சாரம்; ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க வேண்டாம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்


3

  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 07:37 am
  • அ+ அ-

சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் தேமுதிகதலைவர் விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது ‘திமுக தலை வர்மு.க.ஸ்டாலினை நம்பி யாரும்வாக்களிக்க வேண்டாம். அவரை நம்பினால் ஏமாந்து போவீர்கள்’ எனமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

கடந்த தேர்தல்களில் எல்லாம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர பிரச்சாரம் செய்தார். அவரது பேச்சால் அரசியல் களம் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால், உடல்நிலை காரணமாக இந்தத் தேர்தலில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் இருந்தது கட்சித் தொண்டர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று கடந்த பிப்ரவரியில் சென்னை திரும்பிய விஜயகாந்த், தொடர்ந்து ஓய்வில் இருந்தார். அவரை தேர்தல் பிரச்சாரத்தில் காண தேமுதிகவினர் மட்டுமின்றி, அதிமுக கூட்டணி கட்சியினரும் பெரிதும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். மருத்துவர்களிடம் ஆலோசித்து வருவதாகவும், விரைவில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என்றும் பிரேமலதா தெரிவித்திருந்தார்.

தேர்தல் பிரச்சாரம் இன்று முடிவடைய உள்ள நிலையில், சென்னையில் விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார்.

வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே அவர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கு மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால், கூட்டணி கட்சியினரும் பொதுமக்களும் விஜயகாந்தை காண திரண்டனர். மாலை 6.45 மணிக்கு பிரத்யேக பிரச்சார வாகனத்தில் வந்த விஜயகாந்த், அங்கு திரண்டிருந்தவர்களைப் பார்த்து புன்னகையோடு கையசைத்து வணக்கம் தெரிவித்தார். பின்னர் அவர் இரண்டொரு வார்த்தைகள் பேசினார். அவர் பேசும்போது, ‘‘நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். வணக்கம். இந்த தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம் பாலுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என கூறினார். அதைத் தொடர்ந்து கொளத்தூர், பெரம்பூர், திரு.வி.க.நகர், ராயபுரம், திருவொற்றியூர், ஆர்.கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடசென்னை தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜூக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். பெரவள்ளூரில் விஜயகாந்த் பேசும்போது, ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க வேண்டாம். அவரை நம்பி வாக்களித்தால் ஏமாந்து போவீர்கள். முதல்வர் பழனிசாமி நல்ல உள்ளம் படைத்தவர். மேலும், நல்ல உள்ளம் படைத்த வடசென்னை தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜூக்கு முரசு சின்னத்தில் வாக்குகளை அளியுங்கள்’’ என்றார்.

விருகம்பாக்கம் பகுதியில் தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனுக்கு வாக்கு சேகரித்தார். விஜயகாந்தின் பிரச்சார வாகனத்தை பின்தொடர்ந்து மற்றொரு காரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்தார். தேமுதிகவினரும் கூட்டணி கட்சியினரும் இருசக்கர வாகனங்களில் பேரணியாக வந்தனர். செல்லும் வழியெல்லாம் சாலையோரம் நின்றிருந்த கட்சியினரையும் பொதுமக்களையும் பார்த்து விஜயகாந்த் கையசைத்து வணக்கம் தெரிவித்தபடி சென்றார். விஜயகாந்தின் பிரச்சாரத்தால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close