[X] Close

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்து விவரங்களை சேகரிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 07:28 am
  • அ+ அ-

கல்வித்துறையில் ஊழல் அதிகரித்து விட்டதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அளவுக்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கியிருந்தால் அவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை கட்டாயமாக்கப்படும் என தமிழக அரசு கடந்தாண்டு அரசாணை வெளியிட்டு அதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் அரசுப்பள்ளி ஆசிரியையான ஆர்.அன்னாள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பயோ மெட்ரிக் சிஸ்டத்துடன் ஆதாரை இணைக்கக்கூடாது. இவ்வாறு இணைப்பது அடிப்படை உரிமைகள் மற்றும் தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது. இதுதொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தமிழக அரசு தற்போது மீறியுள்ளது. எனவே பயோ மெட்ரிக் சிஸ்டத்துடன் ஆதாரை இணைக்கும் வகையில் அரசு கடந்தாண்டு அக்.25 அன்று பிறப்பித்துள்ள அரசாணை செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும்’’ என கோரியிருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

# அரசு ஊழியர்களான ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு தான் எஜமானர். நிர்வாகத்தை மேம்படுத்த பயோ மெட்ரிக் திட்டத்தை அமல்படுத்த அரசுக்கு முழுஅதிகாரம் உள்ளது. அரசின் பிரதிநிதியாகவே அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திகழ்வதால் அவர்களது ஆதார் எண்ணை வருகைப் பதிவேட்டில் சேர்ப்பது விதிமீறல் கிடையாது.

# தனிநபர் சுதந்திரம் என்பது கூட நிபந்தனைக்கு உட்பட்டுத்தான் இருக்கவேண்டும். இப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒழுங்கீனம் அதிகரித்துள்ளது. இந்தசூழலில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் வருகையை உறுதிசெய்ய அரசு இதுபோன்ற திட்டங்களை கொண்டுவருவதில் எந்த தவறும் கிடையாது.

# பொதுவாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவது கிடையாது. பணிநேரத்துக்கு முன்பாகவே பள்ளியில் இருந்து சென்று விடுகின்றனர். ஆசிரியர்கள் தங்களது பணியைத்தாண்டி பல்வேறு உபதொழில்களை செய்து வருகின்றனர் என ஆசிரியர்களுக்கு எதிராக பல்வேறு புகார்கள் பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு வருகிறது.

# எனவே ஆசிரியர்கள் குறித்த நேரத்துக்கு பள்ளிக்கு வருகிறார்களா என்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசிடம் உள்ளது. அதற்காக அரசு எடுக்கும் கொள்கை முடிவை ஆசிரியர்கள் எதிர்க்க முடியாது.

# மனுதாரரிடம் ஆதார் இல்லை யென்றால் அதை விண்ணப்பித்து பெறலாம். ஒருவேளை மனுதாரர் ஆதார் அட்டையைப் பெற விரும்பவில்லை என்றால் தொடர்ந்து ஆசிரியர் பணியில் தொடர்வதா இல்லை, பணியை விட்டுவிடுவதா என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ள வேண்டும்.

# தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களை விட சம்பளம் மிகவும் குறைவு. இருந்தாலும் அவர்கள் அதிகநேரம் பணியாற்றுகின்றனர்.

# ஆனால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அதிக ஊதியம் பெற்றும் மாணவர்கள் தேர்ச்சி சதவீதத்தில் கோட்டை விடுகின்றனர். அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு ஒரு சில ஆசிரியர்கள் விதிவிலக்காக உள்ளனர். இது வரி செலுத்தும் மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் சொல்லப்போனால் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் திறமையானவர்களே.

# அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கடமைக்காக கல்வியை போதிக்கின்றனர். அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆண்டுதோறும் அரசு பணத்தை தண்ணீராக செலவு செய்கிறது. அப்படியிருந்தும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பது இல்லை.

# எனவே ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்பதால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. பயோ மெட்ரிக் வருகைப்பதிவு திட்டத்துடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை தமிழக கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

# அதேபோல அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முறையாக பதவிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் விதிகளையும் தமிழக அரசு சரியாக கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் ஆசிரியர்களின் கல்வி போதிக்கும் திறன் மேம்படும்.

# முக்கியமாக கல்வித் துறையிலும் ஊழல் அதிகரித்து விட்டது. எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை தமிழக கல்வித்துறை அதிகாரிகள் சரி பார்க்க வேண்டும்.

# ஒருவேளை ஆசிரியர்கள் அளவுக்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கியிருந்தால் அவர்களின் பணிப்பதிவேட்டில் உள்ள விவரங்களுக்கும், தற்போதுள்ள விவரங்களுக்கும் வேறுபாடு இருப்பின் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல அவர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்’ என தீர்ப்பளித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close