[X] Close

தேர்தலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள்: கட்டணக் கொள்ளையில் தனியார் ஆம்னி பஸ்கள்


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 21:08 pm
  • அ+ அ-

தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால் அதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன.

சென்னையில் வெளி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் வசிக்கின்றனர். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்குச் செல்லும் இவர்களைக் குறிவைத்து நூற்றுக்கணக்கில் இருக்கும் கட்டணத்தை ஆயிரக்கணக்கில் ஏற்றி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவது வாடிக்கையாகிப் போனது.

அந்த நேரங்களில் அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கியும், ஆம்னி பேருந்துகளை அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தியும், எச்சரிக்கை விடுத்தும் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைப்பார்கள். அப்படியும் அது நடக்கத்தான் செய்யும்.

தற்போது ஏப்.18 அன்று தேர்தல் நடக்கிறது. இதற்காக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. வியாழக்கிழமை தேர்தல் நாள் என்பதால் வெள்ளி, சனி, ஞாயிறு என கூடுதலாக விடுமுறையைக் கொண்டாடும் எண்ணத்திலும், சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்கவும் சென்னையிலிருந்து அநேகம் பேர் தங்கள் மாவட்டத்துக்குச் செல்ல உத்தேசித்துள்ளனர்.

இதுவும் ஒருவகையில் விழாக்காலம்போல் இருக்கும். அதிலும் வாக்களிப்பதை ஒட்டி தொடர் விடுமுறை வருவதால் குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் இதை சாதகமாகப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை மும்மடங்கு வரை உயர்த்தியுள்ளன.

சென்னையிலிருந்து மதுரைக்கு 440 ரூபாய் அரசுப் பேருந்தில் கட்டணம். ஆனால் ஆம்னி பேருந்தில் மும்மடங்குக்கும் மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த வெளிமாவட்டத்திலிருந்து சென்னையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் கூறும்போது, ''வாக்களிக்க சொந்த ஊருக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து போகும் நிலையை தனியார் ஆம்னி பேருந்துகள் உருவாக்குகின்றன. அரசு விழாக்காலங்களில் விடுவது போன்று சென்னையின் நிலையைக் கருத்தில்கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டும்'' என தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close