[X] Close

பிரச்சாரத்துக்கு முன்னதாக வீடியோ வெளியிட்ட விஜயகாந்த்: நெட்டிசன்கள் உருக்கம்


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 12:29 pm
  • அ+ அ-

எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்  வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர் சிகிச்சை காரணமாக ஓய்வில் இருக்கிறார். இடையில் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்கள் முன் சென்னை திரும்பினார்.

 

உடல்நலம் நன்கு தேறிவிட்டது பிரச்சாரத்துக்கு வருவார் என தேமுதிக தரப்பில் தெரிவித்தாலும், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தலைவர்கள் சந்திப்பு உள்ளிட்ட விவகாரங்களை பிரேமலதாவும், சுதீஷும் கவனித்து வந்தனர்.

 

கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடும் நேரத்தில் விஜயகாந்தை அழைத்து வந்து அமர வைத்தனர். செய்தியாளர்கள் பேசச்சொன்னபோது தொண்டையைக் காட்டி சரியில்லை என்று சைகையால் சொன்னார். பின்னர் அவர் பிரச்சாரத்துக்கு வருவார் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

ஆனால், பிரச்சாரத்தில் பிரேமலதாவும், விஜயகாந்தின் மகனும் மட்டுமே பேசி வருகின்றனர். விஜயகாந்த் எங்கும் வெளியில் வரவில்லை. இதற்கிடையே விஜயகாந்த் சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தேமுதிக வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ், அதிமுக தென்சென்னை தொகுதி வேட்பாளர் ஜெயவர்தன், பாமக மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் சாம்பால் ஆகிய்யோரை ஆதரித்து இன்று மாலை 4 மணிக்கு பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார்.

 

இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த். அதில் அவர் பேசியதாவது:

''பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, அன்புகொண்ட சகோதர சகோதரிகளே, என் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே! அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

எனக்காகப் பிரார்த்தனை செய்துகொண்ட அனைவருக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள். நமது சின்னம் முரசு. நாம் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மொத்தம் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்யுமாறு இரு கரம் கூப்பி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று'' தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.

 

அந்த வீடியோ தொடர்ச்சியாக எடுக்கப்படாமல், எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது. வீடியோவின்போது இடையில் பேச முடியாமல் விஜயகாந்த் சிரமப்படுகிறார். அவரின் குரல் கமறுகிறது.

 

இந்நிலையில் வீடியோ பதிவிற்கு நெட்டிசன்கள் உருக்கமாகப் பதிலளித்துள்ளனர். 

@vnovino373 என்பவர், அரசியலே வேண்டாம்.... நீங்க நல்லா இருந்தா போதும்! என்றும் @madurai_logu என்னும் பதிவர், உங்களை வைத்து ஓட்டு அரசியல் செய்றாங்க கேப்டன்... போதும் இதற்கு மேல் கேப்டனை இப்படி பாக்க கஷ்டமா இருக்கு! என்று தெரிவித்துள்ளார்.

 

@munieswa_rani என்பவர், நல்லவங்க அரசியலுக்கு வந்தா... உதாரணம் கேப்டன்! என்று பதிவிட்டுள்ளார். @SrVimalanathan என்னும் பதிவர் பதிவிடும்போது, மீண்டும் உங்கள் கம்பீரம் தென்படத் தலைமை ஏற்று வாருங்கள்.. காத்திருக்கின்றோம்! என்று ட்வீட் செய்துள்ளார்.

 

@manojravi1222 என்னும் பதிவர் சற்றே கோபப்பட்டுள்ளார். ஏய் அட்மின், செவனேன்னு இருங்கப்பா..எப்படி இருந்த மனுஷன்? இப்டி பாக்க முடில! என்று கூறியுள்ளார்.

 

@Anandhk21412943 என்னும் நெட்டிசன், மீண்டும் கரகரத்த குரலில் ஒலிக்க வேண்டிக்கொள்ளும் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். மிகச் சிறந்த மனிதன் எனும் ஒற்றை காரணத்திற்காக! என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close