[X] Close

கடலூரில் களம் வெல்வது யார்? திமுக - பாமக இடையே கடும் போட்டி


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 11:43 am
  • அ+ அ-

-க.ரமேஷ்

21 வேட்பாளர்கள் களத்தில் உள்ள கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக - பாமக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருகட்சியினரும் தொகுதியை கைப்பற்ற, கூட்டணிக் கட்சியி னருடன் இறுதி கட்ட பிரச்சாரத்தில தீவிரம் காட்டி வருகின்றனர்.

கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகளை உள்ளடக்கியது கடலூர் மக்களவைத் தொகுதி.

இந்தத் தொகுதியில் இதுவரை நடந்த 16 மக்களவைத் தேர்தல்க ளில் 8 முறை காங்கிரஸ், 4 முறை திமுக, 2 முறை அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறை, சுயேட்சை ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.

இந்த முறை இத்தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி, திமுக கூட்டணியில் திமுக வேட்பாளர் ரமேஷ், மக்கள் நீதி மையம் சார்பில் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் சித்ரா, அமமுக சார்பில் காசிதங்கவேல் உள்ளிட்ட 21 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஆனாலும் பிரதான போட்டி என்பது திமுக, பாமக இடையே தான். இரு தரப்பிலும் முக்கியத் தலைவர்கள் வந்து பிரச்சாரத்தை முடித்து சென்றுள்ள நிலையில், இறுதி கட்டத்தில் திமுக, பாமக வேட்பாளர்கள் கூட்டணி கட்சியினருடன் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் தொகுதியைப் பொறுத்த வரையில் திமுக, அதிமுக சம பலத்தில் உள்ளன. அதேபோல் பாமக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கும் கணிசமான வாக்குகள் உள்ளன.

அதிமுக கூட்டணி பாமக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத்,கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்மொழிதேவன், பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தொகுதி முழுவதும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

இந்தத் தொகுதியில் பாமக முதல் முறையாக திமுகவுடன் நேரடியாக மோதுவதால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என தொண்டர்கள் கருதுகின்றனர்.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கணேசன், நெய்வேலி எம்எல்ஏ சபாராஜேந்திரன் மற்றும் மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் கூட்டணிக் கட்சியினர் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்.

திமுக வேட்பாளர் ரமேஷ் அரசியலில் இருந்தாலும், தொண் டர்களிடம் அறிமுகம் இல்லாதது இவருக்குள்ள 'மைனஸ்'. ஆனாலும் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக என கூட்டணி வலு உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொகுதியில் திமுக போட்டியிடுவதால் தொகுதியை கைப்பற்ற திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் களப் பணியாற்றுவது வேட்பாளருக்கு கூடுதல் பலம்.

திமுக - பாமக வேட்பாளர் களைத் தாண்டி அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டுகின்றன. இக்கட்சிகள் வாக்குகளை பிரித்தாலும் இரு கட்சி வேட்பாளர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று களத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

வடமாவட்டங்களில் தங்களது முக்கியமானதொரு பகுதியாக கடலூர் மக்களவைத் தொகுதியை பாமக கருதுகிறது. தனது செல்வாக்கு மிக்க பகுதிகளில் ஒன்றான கடலூரை தக்க வைக்க வேண்டும் என்று திமுக விரும்புகிறது.

கட்சிகளின் விருப்பங்களுக்கு 18-ம் தேதி விடை சொல்ல இருக்கின்றனர் கடலூர் தொகுதிவாசிகள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close