[X] Close

சிறு, குறு தொழில் முனைவோர் வேட்பாளர்களிடம் எதிர்பார்ப்பது என்ன?


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 11:23 am
  • அ+ அ-

-ஆர்.கிருஷ்ணகுமார்

உழவும், தொழிலும் தற்போது கடும் நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கின்றன. குறிப்பாக, கோவையின் பிரதான  அடையாளங்களில் ஒன்றான  சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் நிறைய எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. வேளாண்மைக்கு அடுத்தபடியாக உள்ள தொழில்துறையில், அதிக வேலைவாய்ப்பை வழங்குவது சிறு, குறுந் தொழில்முனைவோர்தான். குறிப்பாக, தமிழகத்தில் சுமார் 10 லட்சம் சிறு, குறுந் தொழில்நிறுவனங்களை நம்பி 80 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். கோவையில் மட்டும் 50000 சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள், சுமார் 5 லட்சம் பேரின் வாழ்வாதாரமாகத் திகழ்கின்றன. கோவை மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் பிஹார், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துவருகிறது.

குண்டூசி முதல் ராக்கெட் வரை...

ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல்ஸ், காற்றாலை, மோட்டார் பம்ப்செட், வெட்கிரைண்டர்கள் என பல்வேறு தொழில்களுக்கும் தேவையான உதிரிபாகங்கள் முதல், ராணுவத் தளவாடங்களுக்கான உதிரிபாகங்கள் வரை கோவையில் தயாராகி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

கடந்த 1998-ல் தொடர் குண்டு வெடிப்பின்போதும், 2008 முதல் 2012 வரை மின் வெட்டுப் பிரச்சினையாலும் சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள்  பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தன. இவற்றிலிருந்து மீண்டு வருவதற்குள் பண மதிப்பு நீக்கம் பாதிப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்தும் மீள முயற்சிக்கும்போது, ஜிஎஸ்டி வரி விதிப்பு சிறு, குறுந் தொழில்முனைவோரை அவதிக்குள்ளாக்கியுள்ளது. சிறு, குறுந் தொழில் துறையின் வளர்ச்சியில் மத்திய அரசுக்கும் கணிசமான பங்கு இருக்கிறது. இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம்  சிறு, குறுந் தொழில்முனைவோர் எதிர்பார்ப்பது என்ன என்ற கேள்வியுடன்,  தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்கத் தலைவர் ஜே.ஜேம்ஸை அணுகினோம்.

“3200-க்கும் மேற்பட்ட பொருட்களை, பெரிய மற்றும் நடுத்தர தொழில்கள் உற்பத்தி செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டு, சிறு, குறுந் தொழில்நிறுவனங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், 1991-ல் சர்வதேச புதிய பொருளாதாரக் கொள்கை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட பின்னர், பெரு நிறுவனங்கள் மட்டுமின்றி, அந்நிய நிறுவனங்களும் அனைத்துப் பொருட்களையும் உற்பத்தி செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டதால், சிறு, குறு நிறுவனங்கள் பாதிக்கப்படத் தொடங்கின.

இதையடுத்து, பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளான குறுந் தொழில்முனைவோர், ஜிஎஸ்டி அமலாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, வரலாறு காணாத வகையில் ஜாப் ஆர்டர்களுக்குக்கூட 18 சதவீத வரி விதிக்கப்பட்டதால், நூற்றுக்கணக்கான குறுந் தொழில்கூடங்கள் மூடப்பட்டன. எனவே, ஜிஎஸ்டி-யை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும், ஜாப் ஆர்டர்கள் முறையில் இயங்கும் தொழில் நிறுவனங்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் வலியுறுத்தியுள்ளோம்.

இதேபோல, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை எளிமையாக்க வேண்டும், இதுவரை வசூலித்த அபராதத் தொகைகளை சிறு, குறுந்தொழில்முனைவோருக்கு திருப்பித்தர வேண்டும், யூனிட்டு ரூ.6.50 முதல் ரூ.8 வரை வசூலிக்கப்படும் மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கும் உதிரி பாகங்களில் 20 சதவீதத்தை, சிறு, குறுந் தொழில்முனைவோரிடம் வாங்க வேண்டுமென்ற உத்தரவை கட்டாயம் கடைப்பிடிக்கச் செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

நடைமுறைகள் எளிமையாக்கப்படுமா?

தொழில் விரிவாக்கம், புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு வங்கிகளில்  கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களால், அதிக வட்டி பெறும் தனியாரை நாட வேண்டியுள்ளது. எனவே, வங்கிக் கடனுதவிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.

தொழில்முனைவோருக்கு மீண்டும் மத்திய அரசின் மானியம் கிடைக்கவும், அதை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை நகரையொட்டியுள்ள பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும். அடுக்குமாடி தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும். தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களில் 50 சதவீதத்தை சிறு, குறுந்தொழில்முனைவோரிடம் வாங்க வேண்டுமென சட்டமியற்ற வேண்டும். அதேபோல, குறுந்தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க மத்திய அரசு தனி பாதுகாப்பு சட்டமியற்றினால் மட்டுமே, கோவையின் அடையாளத்தைப்  பாதுகாக்க முடியும்” என்றார்.

மோட்டார் பம்ப்செட் உற்பத்தியாளர்கள்

கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் (கோப்மா) தலைவர் கே.மணிராஜ் கூறும்போது, “பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி-யால் மோட்டார் பம்ப்செட் தொழில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

விவசாயம் மற்றும் குடிநீர் விநியோகப் பணிக்கு அத்தியாவசியமான மோட்டார் பம்ப்செட் விற்பனைக்கு 12 முதல் 18 சதவீதம் வரை வரி  விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜாப் ஒர்க் அடிப்படையிலான பணிக்கும் 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல சிறு நிறுவனங்கள் மூடப்பட்டு, தொழில்முனைவோர் டிபன் கடை, அரிசி விற்பனை, டிரைவர்  உள்ளிட்ட மாற்றுப் பணிகளுக்கு செல்லும் நிலை உருவானது.  எனவே, வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.  ஜாப் ஒர்க் அடிப்படையிலான பணிக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வேட்பாளர்களிடம் வலியுறுத்தினோம்.

நாங்கள் எந்த அரசியல் இயக்கத்தையும் சார்ந்தவர்கள் அல்ல. எனவே, எங்கள் கோரிக்கையை ஏற்கும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தோம். இந்த நிலையில், கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார். எனவே, அவருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.

வரி செலுத்துவதை சுலபமாக்கிய ஜிஎஸ்டி!

அதேசமயம், ஜிஎஸ்டி நடைமுறைகள் வரி செலுத்துவதை சுலபமாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோயம்புத்தூர் வெட்கிரைண்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சாஸ்தா எம்.ராஜா கூறும்போது, “வாட், மத்திய விற்பனை வரி, கலால் வரி என விதிக்கப்பட்டு வந்த பலமுனை வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பல்வேறு வரிகளுக்கு கணக்கு புத்தகங்கள் பராமரிப்பது, அந்தந்த அலுவலகங்களுக்குச் சென்று வரிதாக்கல் செய்வது போன்ற சிரமங்கள் குறைந்துள்ளன. ஆன்லைன் மூலம் வரி தாக்கல் நடைமுறைகள் இருப்பதால், நேரம் மீதமாகிறது. மேலும், முன்னர் இருந்த வரி நடைமுறையில், மூலப் பொருட்களுக்கு செலுத்திய வரியை எங்களால் திரும்பப் பெற முடியாது. தற்போது, அதை உள்ளீட்டு வரியாக திரும்பப் பெற முடிகிறது.ஜிஎஸ்டி அமலாக்கத்தின்போது வெட்கிரைண்டர்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. தேசிய கயறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கவனத்துக்கு இதை கொண்டு சென்றோம். மத்திய அரசுக்கும், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் எங்கள் கோரிக்கையை கொண்டுசெல்ல அவர் உதவினார். இதனால், ஜிஎஸ்டி 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதை 5 சதவீதமாக குறைக்க வேண்டுமென்றும் நாங்கள் வலியுறுத்தினோம். தற்போது கோவை தொகுதியில் அவர் போட்டியிடும் சூழலில், ஜிஎஸ்டி-யை 5 சதவீதமாக குறைப்போம் என  வாக்குறுதி அளித்துள்ளார். இதற்காக `கவுமா’ சங்கம் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close