[X] Close

தொழில் நகரில் மகுடம் சூடப்போவது யார்?- தீவிரப் பிரச்சாரத்தில் பாஜக- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 11:05 am
  • அ+ அ-

-ஆர்.கிருஷ்ணகுமார்

தொழில்துறையில் இந்திய அளவில் முன்னிலை வகிக்கும் நகரம் என்ற பெருமைக்குரிய கோவை நகரம் அடங்கியுள்ள கோவை மக்களவைத் தொகுதியில் வெற்றி வாகை சூட பாஜக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

கோவை மக்களவைத் தொகுதியை அதிமுக-திமுக கட்சிகள் இரண்டுமே, கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டு தந்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் சி.பி.

ராதாகிருஷ்ணன், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.ஆர்.நடராஜன், மக்கள் நீதிமய்யம் சார்பில், அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன், அமமுக சார்பில் அப்பாதுரை உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

ஏற்கெனவே கோவை தொகுதியின் எம்.பி.யாக இருந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர், மாநில அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்கின்றனர்.

மேலும், `நான் வெற்றி பெற்றால், ராணுவ தளவாட மையம், ஜவுளிப் பூங்கா, மேலும் ஒரு மருத்துவக் கல்லூரி. தொழில், ஜவுளித் துறையின் பிரச்சினைகள் தீரும். சர்வதேச நகரங்களுக்கு இணையாக கோவை வளர்ச்சி பெறும், ரயில் வசதி மேம்படுத்தப்படும்' என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்து, மக்களைக் கவர்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன். உள்ளூர் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது இவருக்கு கூடுதல் பலம். அதேபோல, கடந்த தேர்தலில் அதிமுக, பாஜக பெற்ற வாக்குகளைச் சேர்த்தால், வெற்றி நிச்சயம் என்பதும் அதிமுக-பாஜகவின் கணக்கு.

தேர்தல் பிரச்சாரங்களின்போது, "நிலையான ஆட்சி அமைய, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியமைக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஆட்சியில் இருந்தால், தமிழகத்தில் மேலும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தலாம். நாட்டின் பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி, அடிப்படை வசதிகள் மேம்பட பாஜக-வுக்கு வாக்களியுங்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்கு கோவை மாநகருக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்க, எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்" என்று பிரச்சாரத்தின்போது பேசுகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, ராஜா, முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பிரச்சாரம் செய்துள்ளனர்.

அதேசமயம், பிரதமர் மோடி, அமித்ஷா, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், பிரேமலதா விஜயகாந்த், ஜி.கே.வாசன் என பாஜக வேட்பாளருக்கும் விஜபி-க்களின் பிரச்சாரம் குறைவில்லை.

‘இந்த நாட்டுக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியே தேவை' என்பதை வலியுறுத்திப் பேசும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம், ஜாப் ஆர்டர் அடிப்படையிலான பணிகளுக்கு முழு வரி விலக்கு, சிறு, குறுந் தொழில்முனைவோருக்கு தனி நல வாரியம், மாநகராட்சியின் குடிநீர் விநியோகப் பணி தனியாரிடம் ஒப்படைத்தது ரத்து, மெட்ரோ ரயில் திட்டம், விசைத்தறி தொழிலைப் பாதுகாக்க சிறப்பு கவனம், இளைஞர்களுக்கான நவீன விளையாட்டு மைதானங்கள், ஐ.டி. தொழில் வளர்ச்சி, விமானநிலைய மேம்பாடு, ஆனைமலையாறு, நல்லாறு திட்டம், உரிய சுற்றுச்சூழல் அனுமதியுடன் அத்திக்கடவு திட்டம் அமலாக்கம், கோவை-பெங்களூரு இரவு நேர ரயில் இயக்க நடவடிக்கை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளிக்கிறார். ஏற்கெனவே தான் மக்களவை உறுப்பினராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்டத் திட்டங்கள், பணிகளையும் பட்டியலிடத் தவறுவதில்லை.

இவர்களுக்கு இடையே, மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான டாக்டர் மகேந்திரனும், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக கட்சித் தலைவர் கமல்ஹாசன், நடிகை கோவை சரளா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.

இக்கட்சியின் தேர்தல் அறிக்கையே கோவையில்தான் வெளியிடப்பட்டது. அதுதவிர, கோவை மக்களவைத் தொகுதிக்கான விரிவான திட்டங்கள், வாக்குறுதிகளைக் கொண்ட `கோவை 2024' அறிக்கையையும் மக்களிடம் வழங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.

தொழில் துறையின் வளர்ச்சிக்காக புதிய தொழிற்பேட்டைகள், ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, கோவையை சிறப்பு முதலீட்டு மண்டலமாக மேம்படுத்துவது, நைலான் கயிறு, தேங்காய் நார்க் கயிறு பொருட்களுக்கான ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைத்தல், கைத்தறிப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளித்தல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டுக்காக கடனுதவி, மார்க்கெட்டிங், தொழில்நுட்பம் மற்றும் தர மேம்பாட்டு வசதிகள், இளைஞர்கள், தொழிலாளர்களின் திறன்களை அதிகரிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி, விமானநிலைய விரிவாக்கம், புதிய ரயில் சேவைகள் என பல்வேறு வாக்குறுதிகளை வேட்பாளர் மகேந்திரன் அளித்து வருகிறார்.

இதுதவிர, அமமுக வேட்பாளர் அப்பாதுரையும், பல்வேறு பகுதிகளில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பாஜக, அதிமுகவினர் மீது பல்வேறு விமர்சனங்களை வைப்பதுடன், நிறைய வாக்குறுதிகளையும் வழங்கி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close