[X] Close

ஆந்திர மாநிலம் போலாவரம் அணை உபரிநீர் மூலம் 4 தென் மாநிலங்கள் பயன்பெற ரூ.60,000 கோடி திட்டம்: சேலத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி


4-60-000

  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 08:15 am
  • அ+ அ-

ஆந்திர மாநிலம் போலாவரம் அணையின் உபரி நீரை ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களுக்கு கொண்டு வர ரூ.60,000 கோடி திட்ட அறிக்கை ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு பின்னர் இத்திட்டம் நிச்சயம் தொடங்கப்படும் என சேலத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

சேலம் கோட்டை மைதானத்தில் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.சரவணன், தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி, கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் சுதீஷ், நாமக்கல் அதிமுக வேட்பாளர் காளியப்பன் ஆகியோரை ஆதரித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து, நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, முதல்வர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

அப்போது, நிதின் கட்கரி பேசியது: தமிழக முதல்வர் என்னை சந்திக்கும்போதெல்லாம் காவிரி குறித்து பேசுவார். தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினை தீவிரமாக இருப்பதையும், அதன் முக்கியத்துவத்தையும் அறிந்திருக்கிறேன்.

பல மாநிலங்களில் உபரியாக தண்ணீர் உள்ளது. உபரியாக உள்ள தண்ணீரை தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் திட்டம்.

ஆந்திராவில் உள்ள போலாவரம் அணையில் இருந்து ஆண்டுதோறும் வெளியேற்றப்படும் 1,100 டிஎம்சி நீர் உபரியாக கடலில் கலக்கிறது. வீணாகும் இந்த நீரை ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களுக்கு கொண்டு வர வேண்டும் என்பது மத்திய அரசின் முக்கிய திட்டம். இதுகுறித்து ரூ.60,000 கோடியில் திட்ட அறிக்கை ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதில் தமிழக முதல்வர் அதீத அக்கறையுடன் இருக்கிறார். தேர்தலுக்குப் பின்னர் இத்திட்டம் நிச்சயம் தொடங்கப்படும்.

நதி நீரை வீணாகாமல் கொண்டு வருவதற்கு, கால்வாய்க்கு பதிலாக குழாய் அமைத்து கொண்டு வரப்படும். இந்த திட்டம் மூலமாக தமிழகத்தில் திருவள்ளூர் தொடங்கி திருவண்ணாமலை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பயன்பெறும்.

காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. அதன் மூலமாக காவிரி மீதான தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு பாதுகாக்கும். தமிழகத்துக்கு சாலை மேம்பாட்டுக்காக ரூ.6,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. சேலம், கோவை மாவட்டங்களுக்கு 8 மேம்பாலங்கள் கட்ட ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். தமிழகத்தில் 6,666 கிமீ ஆக இருந்த தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் இப்போது 7,400 கிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.7.50 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8 வழிச்சாலை உறுதி

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இத்திட்டம் இப்பகுதிக்கு மிகவும் அவசியமான திட்டமாகும். எனவே, நிலம் கையகப்படுத்தப்படும்போது, இப்போதுள்ள விலையை விட கூடுதலாக விலை கொடுத்து, நிலம் கையகப்படுத்தப்படும். மேலும், திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு கண்டு திட்டத்தை செயல்படுத்துவோம். நான் வாக்குறுதி அளித்தால் அதை 100 சதவீதம் நிறைவேற்றுவேன் என்று பெயரெடுத்தவன். எனவே, தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினைக்கு நான் நிச்சயம் தீர்வு காண்பேன் என்றார்.

கனவு காண்கிறார்

கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: காங்கிரஸ் வறுமையை ஒழிக்கும் எனக்கூறி வருகிறது. 60 ஆண்டுகள் கடந்தும் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் நடக்கும் போதும், தூங்கும்போதும், காரில் பயணமாகும்போதும் கனவு காண்கிறார். அப்பா அமர்ந்த நாற்காலியில் அவரும் அமர வேண்டும் என்பதுதான் அந்த கனவு. இது எப்போதும் பலிக்காது. திமுகவின் அத்தியாயம் ஸ்டாலினுடன் முற்றுப்பெறும் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close