[X] Close

தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி மலரும்: குடியாத்தம் தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் உறுதி


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 08:17 am
  • அ+ அ-

தமிழகத்தில் நடைபெற உள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நிமிடமே தமிழகத்தில் திமுக ஆட்சி மலரும் என மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த், குடியாத்தம் (தனி) சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் காத்தவராயன் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் குடியாத்தம் அண்ணாசிலை அருகே நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:மத்தியிலும், மாநிலத்திலும் மோசமான ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும். மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் நடைபெற உள்ள 22 சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அடுத்த நிமிடமே பழனிசாமி ஆட்சியை கலைத்து திமுக ஆட்சி தமிழகத்தில் மலரும்.

சோதனை பெயரில் நாடகம்

திமுக வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலர் வருமான வரித் துறை சோதனை என்ற பெயரில் நாடகம் நடத்தி, வேலூர் மக்களவை தேர்தலுடன், ஆம்பூர், குடியாத்தம் (தனி) தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்ய சூழ்ச்சி செய்தனர். தமிழகத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மோடி அரசு திட்டமிட்டு வருமானவரித் துறை சோதனையை நடத்தி வருகிறது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அமைச்சர்களாக இருந்த வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன், ஓபிஎஸ் ஆகியோர் மூலம் வாக்காளர்களுக்கு ரூ.650 கோடி பணம் அளித்ததாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

குடிநீர் திட்டம் விரிவாக்கம்

குடியாத்தம் தொகுதியில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக வேட்பாளர் இத்தொகுதியில் வெற்றி பெற்ற உடன் குடியாத்தத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படும். நெசவு தொழிலை மேம்படுத்த குடியாத்தத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். பேரணாம்பட்டு அடுத்த பத்திரப்பல்லி அணை கட்டும் பணி விரைவாக முடிக்கப்படும். குடியாத்தம் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் அமைக்கப்படும். காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அனைத்து பகுதிக்கும் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதேபோல், ஆம்பூர் மற்றும் சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close