[X] Close

மக்களவைத் தேர்தல், 19 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் தமிழகம், புதுச்சேரியில் பிரச்சாரம் நாளை ஓய்கிறது: அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு


19

  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 07:55 am
  • அ+ அ-

தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல், 19 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நாளைமாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

நாடு முழுவதும் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 2-வது கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்களில் உள்ள 97 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுடன் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான இடைத்தேர்தலும் நடக் கிறது. அதேபோல புதுச்சேரியில் ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப் பட உள்ளது.

தமிழகம், புதுச்சேரி உட்பட 2-ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் நாளை (16-ம் தேதி) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கடந்த மார்ச் 20-ம் தேதியில் இருந்து ஒருநாள்கூட இடைவெளியின்றி தீவிர பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன்,அமமுக துணைப் பொதுச்செய லாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி மதுரை, திருப்பூர், கன்னியாகுமரி, சென்னை, கோவை, தேனி, ராமநாதபுரம் ஆகிய இடங்களிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை ஆகிய இடங்களிலும் பிரச்சாரம் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோரும் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் பழனிசாமி சேலத்திலும், துணை முதல்வர் ஓபிஎஸ் தனது மகன் போட்டியிடும் தேனியிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரிலும் பிரச்சாரத்தை நாளை மாலை நிறைவு செய் கின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்களின் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பால் தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாகனசோதனைகளும் அதிகரிக்கப்பட் டுள்ளன. தேர்தல் ஆணையம் சார்பில் வீடு வீடாக பூத் சிலிப் கொடுக்கும் பணியும் தொடங்கியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close