[X] Close

தஞ்சாவூர் அருகே பாஜகவுக்கு வாக்கு கேட்டவர் அடித்துக் கொலை: தனியார் பேருந்து ஓட்டுநர் கைது


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 07:49 am
  • அ+ அ-

தஞ்சாவூர் அருகே பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு கேட்ட சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கோவிந்தராஜ்(75). இவர், ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை பண்ணை ஊழியராக பணியாற்றி, ஓய்வுபெற்றவர். இவ ருக்கு திருமணமாகி, 2 மகன், 1 மகள் உள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக ஒரத்தநாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோவிந்தராஜ் தனியாகவே சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, வாக்கு சேகரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு தனது கழுத்தில் மோடியின் படத்தை மாட்டிக் கொண்டு, ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு நின்ற தனியார் பேருந்து ஓட்டுநரான கண்ணந்தங்குடி மேலையூரைச் சேர்ந்த கோபிநாத்(33), கோவிந்தராஜிடம், ‘‘எதற்கு மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறாய்?’’ எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கோபிநாத், கோவிந்தராஜை அடித்து, உதைத்தாராம்.

இதில், நெஞ்சவலி ஏற்பட்ட நிலையில், மயங்கி விழுந்த கோவிந்தராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஒரத்தநாடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, கோபிநாத்தை நேற்று கைது செய்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close