[X] Close

தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்; பல்வேறு கலை நிகழ்ச்சிகளால் களைகட்டும் தென்சென்னை: பொய்க்கால் குதிரை, புலியாட்டத்தைக் காண கூடும் கூட்டம்


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 07:36 am
  • அ+ அ-

தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், தென்சென்னை தொகுதியில் காலை முதல் மாலை வரையில் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே, வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு கட்சிகளின் கலை இலக்கிய அணியினர் ஆட்டம், பாட்டத்துடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் ராயப்பேட்டை பகுதியில் நேற்று வீதிதோறும் பிரச்சாரம் மேற்கொண்டார். லாயிட்ஸ் காலனி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அவரை இஸ்லாமிய மக்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். வாகனம் செல்ல முடியாத குறுகிய தெருக்களில் தொண்டர்களுடன் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

சில இடங்களில் வேட்பாளர் மற்றும் அவருடன் வரும் கட்சி நிர்வாகிகளுக்கு வாக்காளர்கள் மோர், இளநீர் கொடுத்து உற்சாகப்படுத்தினர்.

திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் புனிததோமையார் மலை ஒன்றியத்தில் உள்ள வேங்கைவாசல், சித்தாலபாக்கம், ஒட்டியம்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம் பகுதியில் நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதேபோல், சைதாப்பேட்டை கோதாமேடு மற்றும் மசூதி தோட்டம் பகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா தியாகராய நகர் பகுதியிலும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆர்.ரங்கராஜன் அசோக்நகர் பகுதியிலும் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அ.ஜெ.ஷெரின் திருவான்மியூர், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். சோழிங்கநல்லூர், அடையார் பகுதிகளில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார்.

மக்கள் கூட்டம் அதிகளவில்..

வேட்பாளர்களை ஆதரித்து காலை மற்றும் இரவு நேரங்களில் அரசியல் கட்சிகளின் கலை இலக்கிய அணிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்தும், எதிர்கட்சிகள் ஆளும் கட்சிகளின் குறைகளை எடுத்து சொல்லி ஆட்டம், பாட்டத்துடன் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, தாரை, தப்பட்டை, பொய்க்கால் குதிரை, புலியாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.இதைக் காண மக்கள் அதிக அளவில் வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close