[X] Close

நோட்டாவுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் திட்டம்


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 07:31 am
  • அ+ அ-

ஒவ்வொரு தேர்தலிலும் குறிப்பிட்ட வாக்கு சதவீதம் நோட்டாவில் பதிவாகி வருவதால் நோட்டாவுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களை கவர திட்டமிட்டு அரசியல் கட்சிகள் பணியாற்றி வருகின்றன.

உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பொத்தானை கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்தல் ஆணையம் பொருத்த வேண்டும் என்று குறிப்பிட்டது.

இதன் அடிப்படையில், வாக்குப் பதிவு இயந்திரத்தில் நோட்டா பொத்தான் பொருத்தப்பட்டது. இதன்படி, 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் 59 லட்சத்து 97 ஆயிரத்து 54 வாக்குகள் நோட்டாவில் பதிவாயின. இது மொத்த வாக்கு சதவீதத்தில் 1 சதவீதம் ஆகும். இந்தத் தேர்தலில் தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளில் நோட்டாவுக்கு 5 லட்சத்து 82 ஆயிரத்து 62 வாக்குகள் பதிவாயின. இது, தமிழகத்தில் பதிவான மொத்தவாக்குப்பதிவில் 1.4% ஆகும்.

இந்திய அளவில் அதிகபட்சமாக தமிழகத்தில் உள்ள நீலகிரி மக்களவைத் தொகுதியில் தான் 45,559 வாக்குகள் நோட்டாவில் பதிவாயின.

இதைத் தொடர்ந்து, 2016-ம்ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நோட்டாவுக்கு 5 லட்சத்து 61 ஆயிரத்து 244 வாக்குகள் பதிவாயின. இது மொத்த வாக்கு சதவீதத்தில் 1.3 சதவீதமாகும்.

இவ்வாறு, நோட்டாவுக்கு தமிழகத்தில் குறிப்பிட்ட வாக்கு சதவீதம் இருப்பதால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்டதலைவர்கள் நோட்டாவில் வாக்களிக்கும் வாக்காளர்களைக் கவரத் திட்டமிட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில்தான் நோட்டாவுக்கு வாக்களிக்காதீர் கள், வாக்காளர்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்கின்றனர். சில முக்கிய கட்சிகளின் பேச்சாளர்கள் கூட நோட்டாவுக்கு வாக்களிக்காமல் தங்களது கட்சிக்கு வாக்களிக்க பேசி வருகின்றனர்.

பிரச்சாரத்தில் நோட்டாவுக்கு முக்கியத்துவம் அளித்து அரசியல்கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்வது பலன் அளிக்குமா என்பது தேர்தல் முடிவு வெளியாகும் போது தான் தெரிய வரும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close