[X] Close

உங்கள் தொகுதி வேட்பாளரின் முழு விவரங்களை முகநூல் பக்கத்தில் அறியலாம்


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 07:33 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் விழிப்புணர்வு முயற்சியாக அனைத்து தொகுதி வேட்பாளர்களின் விவரங்கள் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ல் தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 18-ல்நடைபெற உள்ளது. இதில் திரிபுரா உட்பட 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குட்பட்ட 91 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11-ம்தேதி நடைபெற்றது. இதற்கிடையே தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் நாட்டில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை 2 கோடிஅளவிலே இருந்தது. ஆனால், இப்போது 48 கோடி மக்கள்ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். அவர்களில் பெருமளவினர் இளைஞர்களாக இருக்கின்றனர். மேலும், முகநூல், ட்விட்டர் உட்பட சமூக வலைதளங்களில் தேர்தல் சார்ந்த கருத்துகள் அதிக அளவில் விவாதம் செய்யப்படுகின்றன.

தீவிர பிரச்சாரம்

தேர்தல் முடிவுகளை நிர்ணயம்செய்வதில் கணிசமான அளவு சமூகவலைதளங்கள் தாக்கம் செலுத்தக்கூடும். இதனால் அனைத்து அரசியல் தலைவர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்து உள்ளனர். தங்கள் முகநுால், ட்விட்டர் வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்கின்றனர்.

இதன் காரணமாகவே வேட்பாளர்கள் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யும்போது அதில் சமூக வலைதள கணக்கு விவரங்களை குறிப்பிட வேண்டும் என்று தேர்தல் ஆணையும் வலியுறுத்தியுள்ளது. தேர்தல் தொடர்பான சமூக வலைதள பிரச்சாரங்களையும் கண்காணித்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் விழிப் புணர்வு நடவடிக்கையாக அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து முகநூல் பயனாளர் களும் தங்கள் கணக்கில் உள் நுழையும்போது முகப்பில், ‘உங்கள் தொகுதி வேட்பாளர்களை அறிய வேண்டுமா’என்ற லிங்க் இடம்பெற்றுள்ளது. அதை கிளிக் செய்து மாநிலம் மற்றும் தொகுதி விவரங்களை பதிவு செய்தால், அங்கு போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் விவரங்களையும் புகைப்படத்துடன் காண முடியும்.

இருந்த இடத்திலேயே...

இதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் இருப்பிடத்திலேயே வேட்பாளர்களின் முழு விவரங் களையும், அவர்களின் முகநூல் பக்க செயல்பாடுகளையும் அறிய முடியும். இதற்கு பயனாளர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. வாக்காளர்கள் தங்கள் தொகுதி வேட்பாளர்களின் அரசியல் நிலைப்பாடுகளை ஆராய்ந்து வாக்களிக்க முகநூல் வழிகாட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close