[X] Close
 

தமிழகத்தில் தனிநபர் கழிப்பறைகள் கட்டும் பணி 98.46 சதவீதம் நிறைவு: திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக விரைவில் அறிவிப்பு


tamilnadu-toilets

  • kamadenu
  • Posted: 10 May, 2018 10:54 am
  • அ+ அ-

தமிழகத்தில் தற்போதுவரை 98.46 சதவீதம் தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இப்பணி, கடலூர், விழுப்புரம் தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

சுகாதாரமான இந்தியாவை உருவாக்கிடும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தை கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இத்திட்டம் மூலம் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைக்கவும், திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலையை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டது.

குறிப்பாக 2019-ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் திறந்த வெளிக்கழிப்பிடங்கள் இல்லாத நிலையை ஏற்படுத்த ரூ.1.34 லட்சம் கோடி செலவில் 11 கோடி தனிநபர் கழிப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக நாடு முழுவதும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மத்திய அரசு பணியாளர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்ட்டு பணிகள் கண்காணிக்கப்படுகின்றன.

இத்திட்டம் தொடங்கப்பட்டபோது நாட்டில் 38.7 சதவீத தனிநபர் கழிப்பறைகளே இருந்தன. இன்றைய தேதி வரை நாடு முழுவதும் 83.32 சதவீதம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதுவரை 17 மாநிலங்களும் 382 மாவட்டங்களும் 100 சதவீதம் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக மாவட்டங்கள்

தமிழகத்தில் கடந்த மார்ச்சில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களும் 100 சதவீதம் திறந்த வெளிக்கழிப்பிடங்கள் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 98.46 சதவீதம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என மத்திய அரசால் பட்டியலிடப்பட்டுள்ளது. 


தூய்மை இந்தியா திட்ட ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.வினோத்குமார் கூறியதாவது:

முதலில் 2019-க்குள் இத்திட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, 2018-க்குள் நிறைவுசெய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்துக்குள் திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டது. சில இடங்களில் பணிகள் நிறைவு பெறாததால் வரும் ஆகஸ்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் அறிவிப்பு

தமிழகத்தில் 98.46 சதவீதம் கழிப்பறைகள் கட்டப்பட்டு, அப்பகுதிகள் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாதவையாக மாற்றப்பட்டுள்ளன. அப்பகுதிகள் 100 சதவீதம் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாவட்டங்களாக அந்தந்த மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், மத்திய, மாநில அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே முறைப்படி 100 சதவீதம் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாவட்டங்களாக அரசால் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த. ஹெட்சி லீமா அமலினி கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டம் 100 சதவீதம் திறந்தவெளிக் கழிப்பறைகள் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. சிலர் கழிப்பறைகளை கட்டி வைத்துவிட்டு திறந்தவெளியையே கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்.

- கே.தனபாலன்

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close